ஹளரத் ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: "நபி (ஸல்) அவர்கள் இரவில் தம் படுக்கைக்கு (உறங்குவதற்கு) வந்தால் தம் (வலக்)கரத்தைத் தம் (வலக்)கன்னத்திற்குக் கீழ் வைத்து (ப் படுத்து)க் கொள்வார்கள்.
பின்னர், "அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூது-வ-அஹ்யா" (இறைவா! உன் திருப் பெயரைக் கொண்டு நான் (உறக்கத்தில்) மரணிக்கிறேன். மேலும் நான் (விழித்து) ஜீவிக்கிறேன்!) என்று கூறுவார்கள். அவர்கள் உறங்கி விழித்ததும் "அல்ஹம்துலில்லா ஹில்லதீ அஹயான பஅத மாஅமாதனா வ இலைஹின் னுஷுர்" (நம்மை (உறக்கத்தில்) உயிரிழக்கச் செய்து பின்னர் உயிரூட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், மேலும் (மரணத்திற்குப் பின்) உயிர்த்தெழுதலும் அவன் பக்கமேயாகும்) என்று கூறுவார்கள்.
இந்த ஹதீதில், பகல் முழுக்க அடியான் தன் உலக வாழ்வில் உழன்று விட்டு, இறுதியில் தன் படுக்கைக்கு ஒதுங்கும்போது, ஒரு நாள் உலக வாழ்வை முடித்துக் கொண்டு, இறுதியாக கப்ரில்-மண்ணறையில் நுழையவிருப்பதை நினைவூட்டும் முகமாக "இறைவா! உன் திருப்பெயரால் இதோ உறக்கமெனும் மரணத்தை தழுவுகிறேன். உறக்கத்துக்குப்பின் நான் விழித்தெழுந்தால் அது நீ எனக்கு வழங்கும் உயிர்ப் பிச்சையாகும்." என்று தன் வாழ்வும், மரணமும் தன் இறைவனின் திரு நாட்டத்தில் இருக்கிறது என்பதைத் தன் சிந்தையில் இருத்திக் கொள்ள வகை செய்யும் மணிவாசகத்தை நபி(ஸல்) அவர்கள் தம் உம்மத்தினருக்குக் கற்றுத் தருகிறார்கள்.
அதேசமயம், உறங்கி விழித்ததும், 'உயிர்ப் பிச்சை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி' எனக் கூறி, 'மீண்டும் மரணத்துக்குப்பின் உயிர்ப்பிக்கப் படும்போதும் அவன் பக்கமே சென்றடைய வேண்டியதிருக்கின்றது. என்று சொல்லி, அன்றைய பொழுதை - தனக்கு ஏற்படவிருக்கும் மரணத்தையும் - மறுமையையும் நினைவு கூர்ந்த வண்ணமாகக் கழிக்க அவர்கள் தூண்டுகிறார்கள். ஆக,"இது ஒரு அடியானின் இருபத்து நான்கு மணிநேர வாழ்க்கையும் பரிசுத்தமானதாக-பாவசிந்தனையற்றதாக ஆக்க வல்லது" என்பதில் சந்தேகமில்லை எனலாம்.
அடுத்து மனிதன் உறக்கத்தில் இருக்கும்போது அவனுடைய உயிரின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் "உயிர்களை-அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும் தன் உறக்கத்தில் மரணிக்காலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு உறக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன." (39:42) என்று குறிப்பிட்டுள்ளான்.
இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியரிங் பிரிவின் தலைவராகப் பணியாற்றும் அப்துல்லாஹ் அலிசன் (இவர் இஸ்லாத்தை தழுவிய பிறகு இட்ட பெயர்) "அறிவு மற்றும் உணர்வுகளுக்குப் பதிலளிக்கக் கூடிய இஸ்லாத்துடன் உடனடியாக அறிமுகமாகிக் கொள்ளு"மாறு, மேற்கத்திய மற்றும் அனைத்துலக விஞ்ஞானிகளுக்கும் அறிவழைப்பு விடுத்துள்ளார்.
உறக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய, அவருடைய மின் மற்றும் மின்னனுக் கருவிகளின் துணைக்கொண்டு நடத்திய ஆய்வு மூலம் ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும் பொழுது ஏதோ ஒன்று மனித உடலில் இருந்து வெளிச் செல்கிறது. என்றும், அது எப்பொழுது திரும்புகிறதோ அப்பொழுது அந்த உடலில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை என்பதையும் கணடறிகிறார்.
இந்த ஒரு கண்டுபிடிப்புடன் மேலே சொல்லப்பட்ட விஞ்ஞான மாநாட்டிற்குத் தேவையான ஆய்வுக் கட்டுரையைத் தயாரிக்கும் வேளையில் ஈடுபட்ட பொழுது, குர்ஆனில் மேற்கண்ட வாசகத்தை கண்டதும் அவருடைய பிரமிப்புக்கு அளவே இல்லாமல் போனதாம். அந்த வசனம், அவருடைய கண்டுபிடிப்பை முற்றிலும் ஆமோதிப்பதைப் போலவே அமைந்திருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மனோ தத்துவப் பிரிவைச் சார்ந்த டாக்டர் எஹ்யா அல்முஷ்ரஃபின் துணையோடு "உறக்கமும், மரணமும் ஒரே வழியைச் சார்ந்தவைதாம்" என்று விஞ்ஞானப் பூர்வமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் கூறிய பிரகாரம் நிரூபித்துக் காட்டுகிறார்.
இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது 1400 ஆண்டுகளுக்கு முன் தூதர் நபி(ஸல்) அவர்கள், "இறைவா! உன் திருப்பெயரால் நான் உறங்குகின்றேன்" என்று சொல்லாமல் "இறைவா! உன் திருப்பெயரால் மரணிக்கிறேன்" என்று கூறி, உறக்க நிலையை ஒரு மரணமாகச் சித்தரித்திருப்பது எவ்வளவு எதார்த்த மானது என்றெண்ணி நம்மைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றால் மிகையல்ல.
சிந்தனையே தொகுத்து வாங்கியவர்
கீழை ரஹ்மான்.
மறக்காமல் உங்க கமெண்ட்ஸ். தாருங்கள்
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment