Sunday, February 28, 2010

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---

1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!


Abdul Rahman
Kilakarai.

No comments:

Post a Comment