Tuesday, July 27, 2010

இருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்

நான் சரியான இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மார்க்க சம்பந்தமான அறிவு எனக்கு இருக்கிறதோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் மனைவி – மக்கள், குடும்பத்தினருக்கு நான் இஸ்லாத்தைப் பற்றி கூறி நல்வழிப் படுத்துகிறேனோ இல்லையோ, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

எனது இல்லத்தில் இஸ்லாத்திற்கு மாறான செயல்கள் நடப்பதைக் கண்டும் காணாமல் இருந்து விடுகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மறுமை நாளைக்காக நான் எதை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்க இந்த அவசர கால உலகத்தில் எங்கே முடிகிறது இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஐந்து வேளைத் தொழுவது கடமை என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வேலைப் பளுவினால் என்னால் தொழமுடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ரமலானில் நோன்பு வைப்பது கட்டாயம் என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும். இருப்பினும் பசி தாகம் சமாளிக்க.. நோன்பு வைக்க என்னால் முடியவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தொழிலில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. எனினும் கணக்குப் பார்த்து ஜகாத் கொடுத்திட மனம் இடம் தரவில்லை, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் வாழ்நாள் முழுவதும் ஓடி ஓடி உழைத்து ஓரளவு என் குடும்பத்திற்காக உழைத்து சேர்த்து ஓய்ந்து விட்டேன். இப்போது ஹஜ் செல்லும் அளவுக்கு என் உடலில் தெம்பு இல்லை இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வீட்டில் அபிவிருத்தி வேண்டி மவ்லீது ராத்தீபுகளை புது புது மெட்டுகளில் ஓதி இறையருள் பெற முயற்சிக்கிறேன். இதெல்லாம் தவறு என்று உள்மனம் கூறுகிறது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி கோருகிறோம்! என்று தொழுகையில் ஓதிவிட்டு அவ்லியாக்கள், பெரியார்களிடம் உதவி தேடுவது என் இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது, இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் நாட்டம் நிறைவேற சலவாத்துன்னாறியா 4444 தடவை ஓதி துஆ கேட்கிறேன். இது குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்றாலும் என் மன ஆறுதலுக்காக, அபிவிருத்திக்காக இதை ஓதுவதற்கு ஏற்பாடு செய்கிறேன். இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பால்கிதாப்-பில்லி-சூனியம்-ஏவல்-தகடு-தட்டு-தாயத்து-பேய்-பிசாசு-ஆவி எல்லாம் நம்புகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புனை குறுக்கே செலவது, பல்லி தலையிலே விழுவது, ஆந்தை அலருவது, காகம் கரைவது, ஸஃபர் பீடை மாதம்-கெட்ட சகுனம் என எல்லாம் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேலையும் செய்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

பலர் பாராட்ட கத்னா-பூப்புனித நீராட்டு விழாவை விமரிசையாக நான் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

புதுமனை புகுவிழாவிற்கு பால் காய்ச்சி விழா நடத்துகிறேன். குழந்தைக்கு தர்காவில் சென்று முடி இறக்கி மொட்டை போடுகிறேன். அவ்லியா சன்னிதானத்தில் ஆடு, சேவல் பலி தருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் அம்மாவின் கடைசி ஆசைக்காகத்தான் மஹர் கொடுத்து மணம் புரியாமல் வரதட்சணை வாங்கிக் கொண்டு திருமணம் செய்தேன். என் மனைவியின் ஆசைக்காகத்தான் சுன்னத்தான தாடியை சிரைத்துவிட்டேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் தந்தையின் வற்புறுத்தலால் என் மகன் திருமணத்தை மேள தாளத்துடன் யானை ஊர்வலத்துடன் மிக ஆடம்பரத்துடன் நடத்துகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

வட்டி வாங்கக்கூடாது என்று வான் மறைக்கூறினாலும் கூட என் தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் வீடுகட்ட, கடை ஆரம்பிக்க, பைக் சவாரிக்காக வட்டி வாங்க வேண்டிய நிர்பந்தம். என்ன செய்வது? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

லாட்டரி சூதாட்டம்தான். அரசு அதனை தடை செய்திருந்தாலும் என்ன? நான் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை வாங்கி மறைத்து விற்பனை செய்து வருகிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

குடி குடியைக் கெடுக்கும்! மது ஹராம்தான், ஆனால் எனக்கு டாஸ்மார்க் கம்பெனியில்தான் வேலை கிடைத்தது. கைநிரைய சம்பாதிக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

சினிமா பார்க்கக் கூடாதாம்! இந்த காலத்தில் நடக்கக்கூடிய காரியமா என்ன? பேரும் புகழும் பேரின்பமும் பெற்றுத் தரும் கனவுத் தொழிற்சாலையல்லவா அது! பாம்பு மட்டும்தான் படம் எடுக்குமா? மக்கள் பாராட்டும் விதமாக நான் கூட படம் எடுக்கிறேன், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

அளவு நிலுவையில் மோசடி கூடாதாம். வியாபாரத்தில் பொய் கூடாதாம். (பரக்கத்) இறையருள் கிடைக்காதாம். பொய் சொல்லாமல், மோசடி செய்யாமல் எப்படி விரைவில் பணக்காரன் ஆவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

ஒரு சாண் நிலம் ஆக்கிரமிப்பு செய்தாலும் மறுமையில் ஒரு பூமி அளவு நிலத்தை நான் சுமக்க வேண்டுமாம். பலரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த, அந்த நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டு என் பிள்ளைகளுக்கு எதைக் கொடுத்துவிட்டுப் போவதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கூடாதாம். பிறகு எதற்கு உலகத்தில் வாழ்வதாம்? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

என் குடும்பத்தில் என் நான்கு பிள்ளைகள், நான்கு மத்ஹப்களில் இருக்கின்றனர். நானும் என் தம்பிகளும் எல்லா அரசியல் அமைப்பிலும் அங்கம் வகிக்கிறோம், இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

கடவுள், பாவம், புண்ணியம், நீதி, நியாயம், உண்மை என்கிறவற்றில் நம்பிக்கை கிடையாது. ஏதோ உலகத்திலே பிறந்துட்டோம். முளைக்கிற செடி வளர்ந்து மரமாகிற மாதிரி நாமும் வளர்ந்துட்டோம். ஏதோ வாழந்துட்டு இருக்கிறோம். ஊரோடு இணைந்து போகத்தானே வேண்டும். இஸ்லாமிய அடிச்சுவட்டில் இக்காலத்தில் வாழ்ந்தால் உலகம் நகைக்காதா? இருந்தாலும்... நான் ஒரு முஸ்லிம்!

(அல்ஜன்னத்) ஆசிரியர்: போதும்! போதும்!! கொஞ்சம் இடம் கொடுத்தா, பக்கம் பக்கமாக மானம்-விமானம் ஏற்றிடுவீங்க போலிருக்கே..?.

ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே முஸ்லிமாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள். நமது வாழ்வும். மரணமும் தூய இஸ்லாத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்திட வேண்டும் என்பதை உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

உணர்வாய் உன்னை

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?

உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனத்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா?

7. கடமையான (ஃபர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா?

8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம்?

9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துவா செய்திருக்கிறீர்களா?

பகுதி இரண்டு:

உங்கள் குடும்பம்:

1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் சந்தோஷத்திற்காகவா?

3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா?

5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா?

உங்கள் பெற்றோர்:

1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா?

3. களைய வேண்டிய வெறுப்புகள் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா?

5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 காரியங்கள் எவை?

6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா?

7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா?

8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதுண்டா?

9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்?

10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை:

1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?

4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?

5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?

6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?

9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?

உங்கள் பிள்ளைகள்:

1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?

4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?

6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?

10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?

12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?

13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?

15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?

17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?

18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?

19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?

20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?

21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?

22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?

பகுதி மூன்று:

உங்கள் செல்வம்:

1. கடந்த வருடத்தில் உங்கள் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறீர்களா?

2. அதற்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்தினீர்கள்?

3. உங்கள் வருவாய் (வேலை) ஹலாலானதா? உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் யாரிடம் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்?

4. உங்களுடைய ஜகாத்தைக் கொடுத்துவிட்டீர்களா?

5. எத்தனை முறை, எவ்வளவு தர்மத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்?

6. எவ்வகைப் பொருட்கள், மக்கள், காரணங்களுக்காக இவ்வருடம் செலவழித்திருக்கிறீர்கள்?

7. உங்கள் செலவுகளுக்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?

8. செலவுத்திட்டம் வைத்திருக்கிறீர்களா?

9. உங்கள் கடன் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

10. வட்டி வாங்குவது அல்லது கொடுப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

11. அடுத்த வருடம் எந்த விஷயங்களுக்காக தர்மம் கொடுப்பதை முதன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்?


பகுதி நான்கு:

உங்கள் ஆரோக்கியம்:

1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா?

2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா? இல்லையென்றால் ஏன்?

3. ஒழுங்காக உண்ணுகிறீர்களா?

4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா?

5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா?

6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா?

7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா?

8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்?

பகுதி ஐந்து:

உங்கள் தொழில்:

1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?

2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?

4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?

5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?

6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?

7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?

8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்கும் எத்தி வைத்துள்ளீர்களா..?

பகுதி ஆறு:

உங்கள் கல்வி:

1. உங்கள் தற்போதைய தகுதிகள் எவை?

2. அவை உங்களுக்கு திருப்தியைத் தருகின்றனவா?

3. இல்லையென்றால், எந்த அளவு கல்வியை அடைய விரும்புகிறீர்கள்?

4. உங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்த என்னென்ன ஹலாலான வழிகள் (வட்டியில்லாக் கடன்) உள்ளன?

5. மாணவராக இருந்தால், உங்கள் கல்வி உங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாகக் கொண்டு செல்லுமா?

6. எவ்விதத்தில் உங்கள் கல்வி முஸ்லிம்களுக்கும், பொதுவாக சமுதாயத்திற்கும் உபயோகமாக இருக்கும்?

7. உற்சாகத்தோடும், முழு ஈடுபாட்டோடும் படித்திருக்கிறீர்களா?

8. உங்கள் கல்வித் தகுதியை முன்னேற்ற, எதாவது கூடுதலான திட்டங்கள் அல்லது வகுப்புகளில் சேர வேண்டுமா? (மேற்கண்ட கல்வியை உலகக் கல்வி மார்க்க கல்வி என்று பிரிக்க வேண்டாம். இரண்டும் கல்வி தான்).

பகுதி ஏழு:

ங்கள் நேரம்:

1. இவ்வருடம் எதில் அதிக நேரம் செலவழித்தீர்கள்?

2. அதில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?

3. இல்லையென்றால், எதில் உங்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிட விரும்பியிருப்பீர்கள்?

4. அதை செயல்படுத்த என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்?

5. உங்களிடம் சரியான கால நிர்வாகத் திட்டத் திறமைகள் உள்ளனவா? இல்லையென்றால், அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

6. அதைப் பற்றிய புத்தகம் படிக்க இயலுமா?

7. அல்லது காலநிர்வாகத் திட்டக் கல்வி பயில சிறிது பணம் செலவழிக்க முடியுமா?

8. உங்கள் காலத்தைத் திட்டமிடுகிறீர்களா?

9. உங்கள் வாழ்வில் சரியான முறையில் நேரத்தைச் செலவழித்ததற்கு உதராணமாக ஒரு நாளைக் குறிப்பிட முடியுமா?

10. இவ்வருடம், உங்களுக்கு சராசரியாக ஒரு வாரத்தில் எவ்வளவு ஓய்வு நேரம் கிடைத்தது?

11. தற்போது உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஓய்வாகக் கிடைக்கிறது?

12. உங்கள் ஓய்வு நேரத்தை இன்னும் செம்மையாக எப்படி செலவழிக்கலாம்?

13. அல்லாஹ்வுடன் நெருக்கத்தை அதிகரிக்க உங்கள் ஓய்வு நேரம் எப்படி உதவும்?

14. தொலைக்காட்சி எத்தனை நேரம் பார்க்கிறீர்கள்?

15. அதிக நேரம் தொலைக்காட்சியின் முன்னால் செலவழிக்கிறீர்களா? அல்லது உங்கள் குடும்பத்தினருடன் பேசுவதில் செலவிடுகிறீர்களா?

16. தொலைக்காட்சியின் காணும் காட்சிகள் இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளதா..? பிரயோஜனமாக உள்ளதா..?

பகுதி எட்டு:

உங்கள் இஸ்லாமியப் பணி:

1. நற்கரியங்களுக்காக எத்தனை நேரம் ஒதுக்குகிறீர்கள்?

2. உங்கள் நேரத்தை பள்ளிவாசலுக்காகவோ முஸ்லிம் கல்விக் கூடத்திற்காகவோ செலவழித்திருக்கிறீர்களா?

3. களப்பணியில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

4. இஸ்லாமிய செய்தியை மற்றவர்களிடம் எத்தி வைப்பதற்கு எத்தனை நேரம் செலவழித்திருக்கிறீர்கள்?

5. இஸ்லாத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களைப் போய்ச் சந்தித்தீர்களா?

6. நீங்களும் உங்கள் அக்கம் பக்கத்தினரும் ஒருவர் மற்றவருடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்றீர்களா?

7. ஒரு முஸ்லிம் நிறுவனம் உபயோகிக்கக் கூடிய திறமைகள் எவற்றையாவது வளர்த்துள்ளீர்களா?