Monday, April 5, 2010

பாவச் செயல்கள் المعاصي وأنواعها

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைப்பினங்கள் அனைத்தையும் படைத்துள்ளான். அவனது வல்லமையைப் புரிந்து கொண்டு தன்னைப் பயந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது அத்தாட்சிகளைத் தெளிவுபடுத்தினான். அவ்வாறே, தனது கட்டளைக்கு மாறு செய்வோருக்குத் தான் சித்தப்படுத்தி வைத்துள்ள தண்டனைகளையும் அவன் விபரித்துவிட்டான்.

ஆனால், இன்று மனிதர்களுடைய நிலையை எடுத்துப் பார்த்தால், அவர்கள் அல்லாஹ் தடுத்தவற்றை எடுத்து நடப்பவர்களாகவும் அவன் விலக்கியவற்றைத் தமக்கு அனுமதிக்கப்பட்டவை போன்று மாற்றிக் கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், அவர்கள் அல்லாஹ்வுடைய ஏவல்களை உதாசீனஞ் செய்கின்றனர். இதன் காரணமாக மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமுள்ள உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. ஜீவனோபாயத்திலும், ஆயுட் காலத்திலும் அபிவிருத்தி இல்லாமற்போய்விட்டது. இது பாவங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாகும்.

அதே நேரம் அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அபிவிருத்தியையும் பாவ மன்னிப்பையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், தனது ஏவல்களை அலட்சியப்படுத்தி விலக்கல்களைச் செயற்படுத்தும்போது அல்லாஹ் கோபப்படுகிறான் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் பாவிகளைக் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவன் என்பதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும். பாவிகளை விட்டும் அவனது தண்டனை தடுக்கப்பட முடியாததாகும். இன்று அதிகமானோர் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்ற அதேவேளை இறைவன் தம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் மறந்து வாழ்கின்றனர். அவர்கள் துணிச்சலுடன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு இது மிகப் பிரதானமான காரணங்களிலொன்றாகும். இவ்வாறானவர்களுக்கு அல்லாஹ் தனது கடுமையான தண்டனையையும் கோபத்தையும் எச்சரிக்கை செய்கிறான்.

மேலும், பாவச் செயல்கள் அல்லாஹ்வுக்கும் மனிதனுக்குமிடையிற் தடுப்புச் சுவர்களாக மாறிவிடுவது மாத்திரமன்றி, முதலாவதாக அல்லாஹ்விடமும், அடுத்ததாக அவனது படைப்புக்கள் மத்தியிலும் அவனுக்கு இழிவைத் தேடிக் கொடுக்கின்றன. மனிதர்களோ பாவிகள், அநியாயக்காரர்கள் போன்றோரை இழி கண்கொண்டு நோக்குவர்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, “பாவங்கள் மனித உள்ளங்களுக்குக் கேடு விளைவிக்கின்றன. நச்சுப் பொருட்கள் மனித உடலிற் பாதிப்புக்களை ஏற்படுத்துவது போலவே பாவங்கள் மனித உள்ளங்களைப் பாதிக்கின்றன. பாவங்கள் பல்வேறுபட்ட தராதரங்களிற் காணப்படுவது போல அவை யேற்படுத்துகின்ற தாக்கங்களும் பாதிப்புக்களும் வித்தியாசப்படுகின்றன. உலகிற் காணப்படுகின்ற நோய்கள் மற்றும் அழிவுகளுக்குக் காரணம் மனிதன் புரிகின்ற பாவச் செயல்கள் தவிர்ந்த வேறு காரணங்கள் ஏதுமுண்டா!”.

ஆகவே, பாவிகளனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீள வேண்டும். ஏனெனில், பாவ மன்னிப்பென்பது ஈருலக நற்பாக்கியங்களுக்குமான முதற்படியாகும். இதன் மூலம் மனிதனுக்கு ஆயுளிலும், ஜீவனோபாயத்திலும் அபிவிருத்தி கிடைக்கிறது; அழிவுகள் நீங்கிவிடுகின்றன. இவை பாவ மன்னிப்புக் கோருவதன் சில பயன்களாகும்.

பாவ மன்னிப்புக் கோருபவர் கீழ்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்வது அவசியமாகின்றது:

¨ பாவத்தை விட்டும் விலகி நடத்தல்

¨ தான் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்துதல்

¨ ஏற்கனவே செய்த பாவங்களை மீளவுஞ் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்

¨ பிறரது உடமைகளில் வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தல்

¨ பிறரது உரிமைகளை மீறியிருந்தால் அவற்றுக்காக உரியவரிடம் மன்னிப்புக் கோருதல்

¨ ஹராமான உழைப்பின் மூலம் வளர்த்த தனது உடலை நினைத்து மனம் வருந்துதல்

¨ ஏற்கனவே பாவச் செயல்களில் ஈடுபடப் பயிற்றுவிக்கப்பட்ட தனது உடலை நல்லறங்களில் ஈடுபடப் பயிற்றுவித்தல்

¨ அல்லாஹ் தனது பாவங்களை மன்னிக்க மாட்டானென்று நிராசை அடையாதிருத்தல்

ஒரு தாய் தனது குழந்தைகள் மீது காட்டுகின்ற அன்பைவிட மிக அதிக அளவில் அல்லாஹ் தனது அடியார்கள் மீது அன்பு காட்டுகிறான். இதன் காரணமாக இரவு காலங்களிற் பாவச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காகப் பகலிலும், பகற் காலங்களிற் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதற்காக இரவிலும் அல்லாஹ் தன் கரம் நீட்டுகிறான். ஆகவே, ஏற்கனவே இழைத்த குற்றச் செயல்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி மீளுவதுடன், மென்மேலும் பாவச் செயல்களில் ஈடுபடாது அல்லாஹ்வுக்குப் பொருத்தமான முறையில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வோமாக!



பாவங்களும் அவற்றின் வகைகளும்

பாவங்கள் என்பது அல்-குர்ஆனின் மூலம் அல்லது நபி (ஸல்) அவர்கள் மூலம் விதியாக்கப்பட்ட கடமைகளில் ஒன்றை விட்டுவிடுதல் அல்லது தடை செய்யப்பட்டவைகளில் ஒன்றைச் செய்தலாகும். அவை உள்ளத்தால் நிறைவேற்றப்படுகின்ற செயல்களாகவோ அல்லது உறுப்புக்களாற் செய்யப்படுகின்ற செயல்களாகவோ இருக்கலாம். அல்லாஹ் கூறுகிறான்,

وَمَن يَعْصِ اللّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ

“எவன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்திற் புகுத்துவான்; அவன் அங்கு என்றென்றும் தங்கிவிடுவான்; மேலும், அவனுக்கு இழிவான வேதனையுண்டு” (அந்நிஸாஃ: 14).



பாவத்தின் வகைகள்

பாவங்கள் இரு வகைப்படுகின்றன. அவையாவன: 1) சிறு பாவங்கள், 2) பெரும் பாவங்கள். இவ்வாறு பாவங்களை இரு வகையாகப் பிரித்து நோக்குவதற்குக் கீழ்வரும் அல்-குர்ஆன் வசனங்களையும் நபி மொழியையும் ஆதாரமாகக் கொள்ளலாம். அல்லாஹ் கூறுகிறான்,

إِن تَجْتَنِبُواْ كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلاً كَرِيمًا

“நீங்கள் தடுக்கப்பட்டவற்றிற் பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொண்டால், உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம்” (அந்-நிஸாஃ: 31).

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ

“நன்மை செய்வோர் யாரெனில், எவர்கள் சிறு பிழைகளைத் தவிரப் பெரும் பாவங்களையும் மானக் கேடானவற்றையும் தவிர்ந்து கொள்கிறார்களோ, அவர்கள்” (அந்-நஜ்ம்: 32). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெரும் பாவங்களில் ஈடுபடாது தவிர்ந்து கொள்ளும் காலமெல்லாம், ஐவேளைத் தொழுகைகள் ஒரு தொழுகை மறு தொழுகை வரையும், ஒரு ஜும்ஆத் தொழுகை மறு ஜும்ஆத் தொழுகை வரையும், ஒரு வருட ரமழான் மாத நோன்பு மறு வருட ரமழான் மாத நோன்பு வரையும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற சிறு பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன. [நூல்: முஸ்லிம்]



சிறு பாவங்கள்

கீழ்வரும் 4 நிலைகளிற் பாவச் செயல்கள் சிறு பாவங்களாகக் கருதப்படுகின்றன:

¨ இம்மையிலும் மறுமையிலும் பெரும் பாவங்களுக்கு வழங்கப்படுகின்ற மிகக் குறைந்த தண்டனையின் அளவை விட இவற்றுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகள் அதிகமாக இல்லாதிருத்தல்.

¨ குர்ஆன் வசனங்களிலோ நபி மொழிகளிலோ இவற்றுக்கான தண்டனை கூறப்படாதிருத்தல்.

¨ இவை அல்லாஹ்வின் சாபம், கோபம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று இடம்பெறாதிருத்தல்.

¨ இவற்றில் ஈடுபடுவது ஈமானைப் போக்கிவிடும் என்று இடம்பெறாதிருத்தல்.

இவ்வாறான சிறு பாவங்களுக்குக் கீழ்வரும் விடயங்களை உதாரணமாகக் கூற முடியும்.

¨ அந்நியப் பெண்களைப் பார்த்தல்

¨ பள்ளிவாசலிற் துப்புதல்

¨ பள்ளிவாசலிற் தர்க்கம் புரிதல்

¨ தொலைந்த பொருட்களைப் பள்ளியினுட் தேடுதல்

¨ தொழுகையில் திரும்பிப் பார்த்தல்

இவை தவிர இன்னும் ஏராளமான சிறு பாவங்களை அல்-குர்ஆனும் நபி மொழிகளும் அடையாளப்படுத்துகின்றன.



பெரும் பாவங்கள்

உலகத்தில் அல்லது மறுமையில் தண்டனைகள் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெரும் பாவங்கள் ஆகும். அதாவது, ஒரு செயலைக் குறித்து அதனைச் செய்தவன் மீது நரகம் கட்டாயமாகிவிடும்; அல்லது அவன் மீது அல்லாஹ்வின் கோபம் அல்லது சாபம் ஆகிய இரண்டிலொன்று ஏற்பட்டுவிடும்; அல்லது உலகத்திலோ, மறுமையிலோ அதற்காகக் குறிப்பிட்ட தண்டனையுண்டு என்று எச்சரிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் பெரும் பாவங்களாகவே கருதப்படுகின்றன.



பெரும் பாவங்களின் எண்ணிக்கை

பெரும் பாவங்களின் எண்ணிக்கையை வரையறுத்துக் கூறுவதில் ஸஹாபாக்கள் மத்தியிலும் முரண்பாடான கருத்துக்களே நிலவியுள்ளன. அவை வருமாறு:

¨ இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை நான்காகும்”.

¨ இப்னு உமர் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்களின் எண்ணிக்கை ஏழாகும்”.

¨ இப்னு அப்பாஸ் (ரலி) கூறுவதாவது, “பெரும் பாவங்கள் ஏழு என்று கூறுவதை விட எழுபது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது”.

மேலும், 700 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கீழ்க் காணும் விடயங்களை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

அதே போன்று கீழ்வரும் விடயங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தனவாகும்:

¨ ஒரே பாவத்தைத் தொடர்ந்து செய்தல்

¨ அல்லாஹ்வின் அருளை விட்டும் நம்பிக்கையிழத்தல்

¨ அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் அபயம் பெற்றிருத்தல்

¨ பொய்ச் சத்தியம் செய்தல்

¨ விபச்சாரம் செய்தல்

¨ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடல்

¨ திருடுதல்

¨ பொய்யுரைத்தல்

¨ சபித்தல்

¨ போதைப் பொருட்களைப் பாவித்தல்

¨ கர்வங் கொள்ளல்

¨ உறவுகளைத் துண்டித்து நடத்தல்

¨ புறம் பேசுதல்

¨ மோசடி செய்தல்

¨ ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழாக ஆடை அணிதல்

¨ இலஞ்சம் (வாங்குதல், வழங்குதல், துணை போதல்)

¨ ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாகுதல்

¨ அயல் வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

¨ ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்கள் எதுவுமின்றி ஜும்ஆ, ஜமாஅத் தொழுகைகளை விட்டுவிடுதல்

இவ்வாறான குற்றச் செயல்களைத் தவிர்ந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளுக்கும் பாவ மன்னிப்புக்கும் உரியவர்களாக மாற எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!


Abdul Rahman
Doha -Qatar

No comments:

Post a Comment