அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது மனைவிமார் மீதும் மற்றும் நல்லவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.
சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன் அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.
1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போது அதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்”. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு “அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.
2- மனித உள்ளங்கள் – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் – சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள்
3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என ஆண் பெண் இரு பாலரையும் சேர்த்தே குர்ஆன் கூறுகின்றது. மற்றோரிடத்தில் ”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (4:124) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.
4- பெண்கள் சுவனத்தில் நுழைந்தால் எங்கிருப்பார்கள்? என்ன செய்வார்கள்? இப்படியாக சுவர்க்கத்தில் அவர்களின் நிலை பற்றி அதிகமான கேள்விகளைக் கேட்டு இதிலேயே தங்கள் சிந்தனையை எப்போதும் மூழ்கடித்து விடக்கூடாது.
உலகில் நாம் காணும் இழிவு, கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் நுழைவதன் மூலமே இல்லாது போய்விடும். அந்த சுவர்க்க வாழ்க்கை முடிவே இல்லாத முழு இன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். இதனையே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ”அவற்றில் (சுவர்க்கங்களில்) அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.” (15:48.)
மற்றுமோர் இடத்தில் ”இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கணகளுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும் ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” (என அவர்களிடம் சொல்லப்படும்.)” (43:71.) இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றே போதுமானதாகும். ”அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான், அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” (5:119)
5- சுவர்க்கத்தில் உள்ளம் ஆசை கொள்ளும் அம்சங்களாக அல்லாஹ் குறிப்பிடும் உணவு வகைகள், கண் கவர் காட்சிகள், அழகான படுக்கையறைகள், பலவிதமான உடைகள் இவை அனைத்தும் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதே. எல்லோரும் இவ்வின்பங்களை அனுபவிப்பார்கள்.
அதிகமாக பெண்கள் தரப்பிலிருந்து வினவப்படும் ஓர் அம்சம்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை மக்களுக்கு ஆசையூட்டும்போது அங்கு ஆண்களுக்கு ‘ஹூருல் ஈன்’ பெண்கள் சுவர்க்கத்தமிலிருப்பதாகவும் இன்னும் அழகான பெண்கள் இருப்பதாகவும் கூறுகிறான் ஆனால் இது போல் பெண்கள் சம்மந்தமாக ஏதும் கூறவில்லையே, பெண்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதாகும்.
இதற்குரிய விடையை இப்படி நாம் பார்க்கலாம்.
(1) அல்லாஹ் ”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.” ஆனால் ஏன் அல்லாஹ் இந்த வியத்தை இப்படி வைத்திருக்கிறான் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுக்குள்ளே இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில் குற்றம் ஏதும் இருக்காது.
(2) எல்லோரும் ஏற்றுக் கொள்வது போல் பெண்களிடம் காணப்படும் இயற்கையான ஒரு அம்சம்தான் வெட்கம். இதனால் இறைவன், பெண்கள் வெட்கப்படும் ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டவில்லை.
(3) பெண்கள் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆண்கள் மீது பெண்கள் ஆசை கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஆண்கள் மிக ஆசை கொள்ளும் இவ்வம்சத்தின் மூலம் ஆண்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் ”எனக்குப் பின் நான் உங்களில் அதிகம் பயப்படும் விஷயம் பெண்களால் ஏற்படும் பித்னாக்களைத்தான்” என்று கூறியிருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் மீது ஆசை கொள்வதை விட அழகு, ஆபரணங்கள், அலங்காரம் போன்றவற்றில் மிக மிக ஆசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களின் சுபாவமாகும்.
(4) இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அல்லாஹுதஆலா ஆண்களுக்கு மனைவிமார்கள் (சுவர்க்கத்தில்) உண்டு எனக்கூறியது, எப்போதும் ஆண்களே பெண்களைத் தேடுவார்கள் (ஆசையோடு அழைப்பார்கள்) எனவே சுவர்க்கத்தில் மனைவிமார்கள் உண்டு எனக்கூறி பெண்களுக்கு கணவன்மார்கள் பற்றி கூறவில்லை. ஆனால் இதனால் சுவர்க்கத்தில் பெண்களுக்கு கணவர்மார்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கும்(பெண்களுக்கு) மனிதர்களிலிருந்தும் கனவன்மார்கள் அங்கிருப்பார்கள்.
6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.
(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.
(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).
(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.
(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.
1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”
2-இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.
3-இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).
4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)
5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.
6-கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.
7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”
8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.
9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”
இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)
அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.
தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)
எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.
Abdul Rahman
Doha-Qatar
Tuesday, March 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment