Sunday, March 14, 2010

நோயாளியை நலம் விசாரித்தல்

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)


''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)


அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிஅவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

No comments:

Post a Comment