Saturday, March 13, 2010

கனவுகள் (Dreams)

நுபுவத்தில் நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நற்செய்தி கூறக் கூடியவைகள் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நல்ல கனவுகள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (6990)

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகின்றன. உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடப் புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூகததா (ரலி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், திர்மிதி

காணாத (அல்லது கண்ட) கனவு விஷயத்தில் யார் பொய் சொல்கிறாரோ அவர் (மறுமையில்) இரண்டு கோதுமைகளை சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் கட்ட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரீ (7042), திர்மிதீ (2385)

பயன்கள் :

நல்ல கனவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன. அவை நுபுவத்தில் மேலும் நற்செய்தி கூறக் கூடியவைகளில் ஒன்றாக இருக்கின்றன.

நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்தும் கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் ஏற்படுகின்றன. கனவு விஷயத்தில் பொய் சொல்பவருக்கு கடுமையான வேதனையுண்டு.

கனவுகளுக்குரிய ஒழுக்கங்கள்

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும். உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் எந்தப் பக்கம் படுத்திருக்கின்றாரோ அதிலிருந்து திரும்பிப் படுத்துக் கொள்ளட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

- அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரீ (6984), முஸ்லிம்.

உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவினைக் கண்டால் நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் இறைவனைப் புகழ்ந்து அக்கனவை மற்றவரிடம் கூறட்டும். தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் நிச்சயமாக அது ஷைத்தான் புறத்திலிருந்து ஏற்பட்டிருக்கின்றது. அதன் தீங்கை விட்டும் இறைவனிடம் அவர் பாதுகாப்புத் தேடட்டும். அக்கனவை யாரிடமும் கூற வேண்டாம். நிச்சயமாக அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரீ (7045)

உங்களில் ஒருவரின் உறக்கத்தில் ஷைத்தான் விளையாடினால் அதை எந்த மனிதருக்கும் அவர் கூற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது உரையின் போது கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.


பயன்கள் :

ஒரு முஸ்லிம் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். மேலும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தான் விரும்பாத கனவைக் கண்டால் அவன் யாரிடமும் சொல்லக் கூடாது. நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

ஒரு முஸ்லிம் தான் கண்ட அர்த்தமற்ற கனவுகளை மற்றவர்களிடம் கூறக் கூடாது. அவை ஷைத்தானுடைய திருவிளையாடலாகும்.


By

Abdul Rahman
Doha

No comments:

Post a Comment