Tuesday, March 30, 2010

சுவனத்தில் பெண்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன். ஸலவாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் அவர்களது மனைவிமார் மீதும் மற்றும் நல்லவர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக.

சுவர்க்கத்தில் பெண்களின் நிலைமைகள் பற்றி அதிகமாக கேள்விகள் எழுப்பப்படுவதால் அது சம்பந்தமாக சில கருத்துக்களை ஆதாரபூர்வமாக அறிஞர்களின் கருத்துக்களிலிருந்து முன்வைக்க முனைகின்றேன் அல்லாஹ் அதற்கு அருள் செய்வானாக.

1- பெண்கள் அவர்களுக்கு சுவர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்கள், கூலிகள் பற்றி கேள்விகளைக் கேட்பது ஒரு குறையாக கணிக்கப்படமாட்டாது. ஏனனில் மனித உள்ளம் எப்போதும் தனது எதிர்காலம் பற்றியும் கடைசி முடிவு பற்றியும் தெரிந்து கொள்வதில் கடும் ஆசை கொள்கிறது. நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் சுவர்க்கம் பற்றியும் அதிலிருப்பவைகள் பற்றியும் கேள்விகளைக் கேட்ட போது அதைத் தடுக்கவில்லை. ஸஹாபாக்கள் சுவர்க்கம் எதனால் கட்டப்பட்டுள்ளது என்றும் கேட்டார்கள் அதற்கு நபியவர்கள் “சுவர்க்கம் தங்க, வெள்ளி கற்களால் கட்டப்பட்டுள்ளது என்றார்கள்”. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “எங்கள் மனைவிமார்கள் சுவர்க்கத்தில் எமக்குக் கிடைப்பார்களா?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு “அவர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்” என நபியவர்கள் கூறினார்கள்.

2- மனித உள்ளங்கள் – அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் – சுவர்க்கம் அதன் இன்பங்கள் விவரிக்கப்படுகின்ற போது அதை அடைய பேராசை கொள்கின்றன. இது ஒரு நல்ல அம்சமே ஆனால் இதை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாது வெறும் ஆசையாக மட்டும் இருக்கக்கூடாது. ஏனனில் அல்லாஹ் கூறுகிறான் “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) வைகள் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” (43:72.) சுவர்க்கத்தை அடைய ஆசைப்படுங்கள். அது வெறும் ஆசையாக மட்டும் இருக்காது செயல்களால் அதனை உண்மைப்படுத்துங்கள்

3- சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. மாறாக அது ”பயபக்தி உடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என ஆண் பெண் இரு பாலரையும் சேர்த்தே குர்ஆன் கூறுகின்றது. மற்றோரிடத்தில் ”ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.” (4:124) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.

4- பெண்கள் சுவனத்தில் நுழைந்தால் எங்கிருப்பார்கள்? என்ன செய்வார்கள்? இப்படியாக சுவர்க்கத்தில் அவர்களின் நிலை பற்றி அதிகமான கேள்விகளைக் கேட்டு இதிலேயே தங்கள் சிந்தனையை எப்போதும் மூழ்கடித்து விடக்கூடாது.

உலகில் நாம் காணும் இழிவு, கஷ்டம், துன்பங்கள் அனைத்தும் சுவர்க்கத்தில் நுழைவதன் மூலமே இல்லாது போய்விடும். அந்த சுவர்க்க வாழ்க்கை முடிவே இல்லாத முழு இன்பம் நிறைந்த ஒரு வாழ்க்கையாகும். இதனையே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான் ”அவற்றில் (சுவர்க்கங்களில்) அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.” (15:48.)


மற்றுமோர் இடத்தில் ”இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கணகளுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும் ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்” (என அவர்களிடம் சொல்லப்படும்.)” (43:71.) இவை அத்தனைக்கும் மேலாக அல்லாஹ்வின் பின்வரும் கூற்றே போதுமானதாகும். ”அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான், அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் – இது மகத்தான பெரும் வெற்றியாகும்.” (5:119)

5- சுவர்க்கத்தில் உள்ளம் ஆசை கொள்ளும் அம்சங்களாக அல்லாஹ் குறிப்பிடும் உணவு வகைகள், கண் கவர் காட்சிகள், அழகான படுக்கையறைகள், பலவிதமான உடைகள் இவை அனைத்தும் ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவானதே. எல்லோரும் இவ்வின்பங்களை அனுபவிப்பார்கள்.


அதிகமாக பெண்கள் தரப்பிலிருந்து வினவப்படும் ஓர் அம்சம்தான் அல்லாஹ் சுவர்க்கத்தை மக்களுக்கு ஆசையூட்டும்போது அங்கு ஆண்களுக்கு ‘ஹூருல் ஈன்’ பெண்கள் சுவர்க்கத்தமிலிருப்பதாகவும் இன்னும் அழகான பெண்கள் இருப்பதாகவும் கூறுகிறான் ஆனால் இது போல் பெண்கள் சம்மந்தமாக ஏதும் கூறவில்லையே, பெண்களுக்கு என்ன கிடைக்கும்? என்பதாகும்.

இதற்குரிய விடையை இப்படி நாம் பார்க்கலாம்.


(1) அல்லாஹ் ”அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது, ஆனால் அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.” ஆனால் ஏன் அல்லாஹ் இந்த வியத்தை இப்படி வைத்திருக்கிறான் என்பதை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களுக்குள்ளே இருந்து விளங்கிக் கொள்ள முயற்சிப்பதில் குற்றம் ஏதும் இருக்காது.


(2) எல்லோரும் ஏற்றுக் கொள்வது போல் பெண்களிடம் காணப்படும் இயற்கையான ஒரு அம்சம்தான் வெட்கம். இதனால் இறைவன், பெண்கள் வெட்கப்படும் ஒரு விஷயத்தைக் கொண்டு அவர்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டவில்லை.


(3) பெண்கள் மீது ஆண்கள் ஆசை கொள்ளும் அளவுக்கு ஆண்கள் மீது பெண்கள் ஆசை கொள்வதில்லை. எனவே அல்லாஹ் ஆண்கள் மிக ஆசை கொள்ளும் இவ்வம்சத்தின் மூலம் ஆண்களுக்கு சுவர்க்கத்தை ஆசையூட்டுகின்றான். நபி (ஸல்) அவர்கள் ”எனக்குப் பின் நான் உங்களில் அதிகம் பயப்படும் விஷயம் பெண்களால் ஏற்படும் பித்னாக்களைத்தான்” என்று கூறியிருக்கின்றார்கள். பெண்கள் ஆண்கள் மீது ஆசை கொள்வதை விட அழகு, ஆபரணங்கள், அலங்காரம் போன்றவற்றில் மிக மிக ஆசை கொண்டவர்களாகவே இருப்பார்கள். இது அவர்களின் சுபாவமாகும்.

(4) இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அல்லாஹுதஆலா ஆண்களுக்கு மனைவிமார்கள் (சுவர்க்கத்தில்) உண்டு எனக்கூறியது, எப்போதும் ஆண்களே பெண்களைத் தேடுவார்கள் (ஆசையோடு அழைப்பார்கள்) எனவே சுவர்க்கத்தில் மனைவிமார்கள் உண்டு எனக்கூறி பெண்களுக்கு கணவன்மார்கள் பற்றி கூறவில்லை. ஆனால் இதனால் சுவர்க்கத்தில் பெண்களுக்கு கணவர்மார்கள் இல்லை என்பது அர்த்தமல்ல. அவர்களுக்கும்(பெண்களுக்கு) மனிதர்களிலிருந்தும் கனவன்மார்கள் அங்கிருப்பார்கள்.

6- உலகத்தில் பெண்கள் பின்வரும் நிலைமைகளுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள்.

(1) திருமணம் முடிப்பதற்கு முன் ஒரு பெண் இறந்து விடலாம்.

(2) திருமணம் முடித்து விவாகரத்துச் செய்யப்பட்ட நிலையில், மற்றுமொருவரை திருமணம் முடிக்க முன்பு இறந்து விடுபவள்.

(3) திருமணம் முடித்தவள். ஆனால் அவளுடைய கணவனோடு சுவனம் நுழையாதவள். (இந்நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக).

(4) திருமணம் முடித்த நிலையில் மரணித்தவள்.

(5) ஒரு பெண் கணவன் மரணித்த பிறகு, அவள் மரணிக்கும் வரை திருமணம் முடிக்காது இருந்தவள். (6) தன் கணவன் இறந்த பின் இன்னுமொருவரை மணமுடித்தவள். உலகில் பெண்கள் சந்திக்கும் இந்நிலைமைகளுக்கு பொருத்தமானதை மறுமையில் சந்திப்பார்கள்.

1- திருமணம் முடிக்கும்முன் இறந்து போன இவளுக்கு மனிதர்களில் ஒருவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் திருமணம் முடித்து வைப்பான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”சுவர்க்கத்தில் திருமணம் முடிக்காது யாரும் இருக்க மாட்டார்கள்” அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”உலகத்தில் திருமணம் முடிக்காது மரணித்து விட்ட பெண்ணுக்கு சுவர்க்கத்தில் அவளுக்கு விருப்பமானவரை அல்லாஹ் திருமணம் முடித்துக் கொடுப்பான். சுவர்க்க இன்பங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியவைகள் அல்ல. இரு பாலாருக்கும் பொதுவானதே. சுவர்க்க இன்பத்தில் ஒன்றுதான் திருமணம்.”

2-இது போன்றே விவாகரத்துச் செய்யப்பட்டவளாக மரணித்த பெண்ணுக்கும் கிடைக்கும்.

3-இது போன்றுதான் கணவன் சுவர்க்கம் நுழையாத பெண்ணுக்குமாகும். அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் சுவனம் நுழைந்து அவள் உலகில் திருமணம் முடிக்காதவளாக இருந்தால், அல்லது அவளின் கணவர் சுவனம் நுழையாது இருந்தால் அங்கு சுவனத்திலும் திருமணம் முடிக்காத ஆண்கள் இருப்பார்கள்.” (அதாவது இந்த ஆண்கள் அந்தப் பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்வார்கள்).

4- திருமணம் முடித்த நிலையில் இறந்து போனவள் சுவனம் நுழைந்தால் அவள் உலகத்தில் அவளுடைய கணவரை அங்கு பெற்றுக் கொள்வாள். (அவரும் சுவனபதியாக இருந்தால்)

5- கணவன் மரணித்த நிலையில் அவள் மரணமாகும் வரையில் வேறு திருமணம் முடிக்காது இருந்தவள் இவள் அந்தக் கணவனுக்கே மனைவியாக இருப்பாள்.

6-கணவன் மரணித்த பின் வேறொருவரை திருமணம் முடித்தவள் சுவனத்தில் தனது கடைசிக் கனவனையே அடைவாள். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”ஒரு பெண் தனது கடைசிக் கணவனுக்கே உரியவள்.” ஹுதைபா (ரழி) தன் மனைவிக்கு ”நான் சுவர்க்கத்தில் உனக்கு கணவனாக இருக்க வேண்டுமென நீ விரும்பினால், எனக்குப் பின் வேறொருவரை மணமுடிக்காதே. ஏனெனில் சுவர்க்கத்துப் பெண்களுக்கு உலகில் அவர்களின் கடைசிக் கணவன்தான் கிடைப்பார். எனவேதான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களை நபியவர்களின் மரணத்தின் பின் மணமுடிப்பதை அல்லாஹ் ஹராமாக்கினான். சுவனத்திலும் இவர்களே நபிக்கு மனைவிமார்களாவார்கள்.

7 -ஒரு பெண் சுவனம் நுழைந்தால் அல்லாஹ் அவளை குமரிப் பெண்ணாக ஆக்கி விடுகிறான். நபி (ஸல்) கூறுகிறார்கள் ”எந்த ஒரு பெண்ணும் வயோதிக நிலையில் சுவர்க்கம் நுழைய மாட்டார்கள். அல்லாஹ் அவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைத்து அங்கு அவர்களை குமரிகளாக ஆக்கி விடுவான்.”

8- சில ஸஹாபாக்கள் ”உலகத்துப் பெண்கள் சுவர்க்கத்தில் ஹூருல் ஈன்களைவிட பன்மடங்கு அழகாக இருப்பார்கள். காரணம் உலகில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி வழிப்பட்டதாகும்.” எனவும் கூறியிருக்கின்றார்கள்.

9- இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் ”அங்கு சுவர்க்கத்தில் யாரும் மற்றவர்களின் மனைவிமார்களை நெருங்க முடியாது தடுக்கப்பட்டிருப்பார்கள்.”

இறுதியாக அன்பின் சகோதரிகளே! சுவர்க்கம் ஆண்களுக்குப் போன்றே உங்களுக்காகவும் (பெண்களுக்காகவும்) அலங்கரிக்கப்பட்டிருக்கும். ”நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள். உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.” என அல்குர்ஆன் கூறுகின்றது (54:54,55.)

அழிவே இல்லாத சுவர்க்க வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கை அவசரமாக முடிந்து விடும். அன்புச் சகோதரிகளே அந்த சுவனத்தை அடைய வழி உறுதியான ஈமானும் ஸாலிஹான அமல்களுமாகும். போலியான வெறும் சுவன ஆசை மட்டும் நமக்கு அதைப் பெற்றுத்தராது. நபியுடைய இந்த பொன்மொழியை யோசித்துப்பாருங்கள். ”ஒரு பெண் ஐவேளை தொழுதும், வருடத்தில் ஒரு மாதம் நோன்பு நோற்றும், தனது கற்பைப் பாதுகாத்தும், கனவனுக்கு வழிப்பட்டும் நடந்து கொண்டால் ‘மறுமையில் நீ விரும்பும் வாயிலினூடாக சுவர்க்கத்தில் நுழைவாயாக’ என அவளுக்கு கூறப்படும்.” என நபி (ஸல்) கூறினார்கள்.

தான்தோன்றித்தனமாக, கட்டவிழ்த்த காளைக்கன்று போல் ஒழுக்கம் எனும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளிருந்து வெளியேறுவதுதான் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம், என்றெல்லாம் இன்று அழைப்பு விடுக்கின்ற அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள்(?), எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் இணைய, ஒலி, ஒளி அலைவரிசைகளிலிருந்தும் மிக எச்சரிக்கையோடு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இவர்கள் உங்களை இந்த சுவன இன்பத்தை அடையவிடாது தடுப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் இப்படி எச்சரிக்கின்றான் ”(முஃமின்களே) அவர்கள் (நயவஞ்சகர்கள், காபிர்கள்) நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி (இவ்வகையில்) நீங்களும் அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள். ” (4:89.)

எனவே அல்லாஹ் நமது பெண்களுக்கு சுவனம் நுழையும் பெரும் பாக்கியத்தை கொடுப்பானாக. மனித, ஜின், ஷைத்தான்களின் மாய வலைகளிலிருந்து அல்லாஹ் நம்மையும் நம் பெண்களையும் காப்பானாக. ஆமீன்.


Abdul Rahman
Doha-Qatar

Saturday, March 20, 2010

மஹ்ஷரும் இளைஞனும்

بسم الله الرحمن الرحيم


அன்புள்ள சகோதர, சகோதரிகளே தங்கள் அனைவருக்கும்

”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்தஹு (தங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!)


முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் நம் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது இதற்கு இஸ்லாத்தை சேர்ந்த இளைஞர்கள் மட்டும் விதிவிலக்கா? என்றால் இல்லை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இளைஞானவது சீரழிகிறான் இந்த சீரழிவிற்கு 2 காரணங்கள் உள்ளன ஒன்று தவறான நண்பர்கள் இப்படிப்பட்ட நட்பின் காரணமாக அவர்களிடம் கட்டுக்கடங்காத வேகமும் துணிச்சலும் நிறைந்துவிடுகிறது இதனை நன்முறையில் பயன்படுத்தினால் அவன் மிகச் சிறந்த மனிதனாக வரலாம் ஆனால் ஷைத்தான் அவனை சூழ்ந்துக்கொண்டு அவனை சிந்தனையை மறக்கடித்து விடுகிறான்!



மற்றொரு காரணம் இஸ்லாம் அவர்களை சென்றடைவதில் ஏதோ சிக்கல் உள்ளது அப்படியே சென்றடைந்தாலும் அவர்கள் புரிந்துக்கொள்ள தடுமாறுகிறார்கள்! இத்தனைக்கும் காரணம் நம் குடும்ப உறுப்பினர்கள் இப்படிப்பட்ட இளைஞர்களை திட்டுவதும், தரக்குறைவாக நாலுபேர் முன்னாடி அவமானமாக பேசுவதாலும் அவர்கள் மனம் உடைந்து போய் இதற்குமேல் என்ன உள்ளது பெயர் கெட்டுப்போக என்று எண்ணி விடுகிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களிடம் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னால் உன் வேலையைப் பார்த்து விட்டுப் போங்கள் என்றும் உதாசீனப்படுத்தி தங்களைத்தாங்களே நஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள்!


இப்படியே இவர்களை விட்டுவிட்டால் இவர்கள் கைசேதப்பட்டுவிடுவார்கள் எனவே தான் ஒரு வித்தியாசமான முறையில் இவர்களை அணுக எண்ணி இந்த கட்டுரையை வரைந்துள்ளேன்! இதைப்படிக்கும்போது நகைச்சுவையாகவும் கிண்டல் அடிப்பது போன்றும் சிலருக்கு தோன்றும் ஆனால் இந்தக் கட்டுரையை சிந்தித்து படித்தால் இக்கட்டுரையின் உண்மை நோக்கம் தங்கள் முன் வரும்! தயவு செய்து சிந்தித்துப்படியுங்கள் உங்கள் சகோதரர்களுக்காக! தங்களது குடும்பங்களில் இஸ்லாத்தின் தாவா பணி மேற்கொள்ள இது சிறந்த வழியாகவும் ஒரு சிறு உதவியாகவும் தங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன்! அல்லாஹ் நமக்கு தெளிவுபடுத்துவானாக!


மனிதன் மஹ்ஷரில் வெற்றி பெற நபிகளாரின் அறிவுரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஹ்சரின் கேள்விக் கணக்கைப்பற்றி கூறும்போது பின்வரும் 5 கேள்விகளை முன்வைத்தார்கள் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்றார்கள்

1) வாழ்நாளை எப்படி கழித்தான்,

2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான்,

3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான்,

4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்,

5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)


குறிப்பு-

இங்கு ”நான்” என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளதன் காரணம் ஒவ்வொருவரும் இதை உள்ளத்தால் உணரவேண்டும் என்பதற்காகவே! தவறாக எண்ணிவிடவேண்டாம். இந்தக் கட்டுரை ஒரு பிராக்டிகல் (ஒரு செயல்முறை விளக்கமாக உள்ளது)


இனி இந்த கட்டுரையின் உள்ளே செல்வோம்!

நான் மரணித்துவிட்டேன், கப்ருவாழ்க்கையை அணுபவித்து விட்டேன்! இப்போது இறைவன் சந்நிதானத்தில் நிற்கிறேன்! அவன் அர்ஷிலிருந்து என்னைப்பார்த்து கேட்கிறான்!


அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ உன் வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்?


இன்றைய இளைஞன்
என் இறைவா! நான் பெண்கள் பின்னால் நாயாக அழைந்தேன்! ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் நின்றுக்கொண்டு அவர்களில் ஒருத்தியை கடைக்கண் பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தேன்! இதைக்கண்ட அந்தப் பெண்ணின் உறவினர்கள் என்னை துரத்தி துரத்தி அடித்தார்கள்!

இதைக்கண்ட என் தந்தை என் படிப்பை நிறுத்திவிட்டு என்னை தனது கடையில் அமர்த்திக்கொண்டார். அப்போதும் நான் திருந்தவில்லை என் தந்தை இல்லாத சமயத்தில் கல்லாப் பொட்டியில் தினமும் சில ரூபாய்களை திருடினேன்! என் தந்தையோ மகன்தானே என்று கண்டுக்காமல் இருந்துவிட்டார்!

திருடிய பணத்தில் கடைத்தெருவின் ஒரு ஓரத்தில் ஒழிந்துக்கொண்டு புகை பிடித்தேன்! இதைக்கண்ட என் தந்தை ஓட, ஓடு விரட்டியடித்தார்! இதைக்கண்ட ஒரு மாற்றுமத பெண் சிறித்தால் உடனே இருவருக்கும் காதல் மலர்ந்தது! இப்படியே சில மாதங்கள் என் இளமைப்பருவம் கழிந்தது பிறகு ஒருநாள் என் தந்தை இல்லாத நேரத்தில் கடையில் இருந்த 10000 ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணுடன் தலைமறைவாகிவிட்டேன். பத்து நாட்கள் உல்லாசமாக திரிந்ததால் பணம் குறைந்தது உடனே வீட்டிற்கு தெரியப்ப டுத்தினோம் நம் குடும்பத்தினர் பதறியடித்துக்கொண்டு வந்து எங்களை மீட்டனர்! என்னுடன் இருந்த அந்த பெண்ணின் குடும்பம் அவமானம் தாங்காமல் ஊரை காலி செய்துவிட்டு சென்றனர்! சனியன் தொலைந்து போனதாக எண்ணி என நான் நிம்மதி பெறுமூச்சு விட்டேன்!


அல்லாஹ்

என் மீது பயம் வரவில்லையா? பாங்கு சப்தம் உண் காதுகளில் விழவில்லையா?


இன்றைய இளைஞன்

இல்லையே! காரணம் நான்தான் செல்போனுடன் கூடிய ஏர் போன்-ஐ காதில் மாட்டிக்கொண்டு எப்போதும் சினிமா பாடல்களை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேனே எவ்வாறு பாங்கு சப்தம் கேட்கும்.


அல்லாஹ்

ஆதமின் மகனே நீ எவ்வாறு செல்வத்தை ஈட்டினாய்?


இன்றைய இளைஞன்

நான் தவறான பாதையில் சென்றதை கண்டு என் தாயார் கவலையடைந்து பெண் பார்க்க ஆரம்பித்தனர் மாப்பிள்ளை வெத்துவேட்டு என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த என் தந்தை கடையின் முழு பொறுப்பையும் எண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். நானோ புது முதலாளி என் நண்பர்களுடன் சேர்ந்து சுதந்திரப்பறவை போல் என் இளமையை கழித்தேன் யாரும் என்னை இஸ்லாத்தை பற்றி எடுத்துக்கூறவில்லை!

1000 பொய் சொல்லி நிறை பணத்தை செலவழித்து மார்க்க ஒழுக்கம் பற்றி அறியாத ஒரு பெண்ணை மணந்துக் கொண்டேன் காரணம் நிறைய தங்கமும், கை நிறைய வரதட்சணை பணமும் கொடுத்தார்கள்! 8 மாதங்கள் கழிந்தன தலைப்பிரசவத்தை என்னுடைய குடும்பத்தில் பார்ப்பதில்லை என்று என் தாயார் அறிவுரை கூறியதன் படி கர்ப்பிணிப்பெண்ணாகிய என் மனைவியை அவளது தாயார் வீட்டிற்கு பிரசவம் முடிந்து வா! என துரத்தினேன்! அவளும் கை குழந்தையுடன் 6 மாதம் கழித்து புத்தாடைகள், நகைகள், குழந்தையின் பெயரில் வைப்புத்தொகை (Fixed Deposit) போன்ற வற்றை கொண்டுவந்தால் உடனே ஏற்றுக்கொண்டேன்! என் மாமனாரோ என்னால் கடனாளியாக மாறினார்! இவ்வாறுதான் நான் செல்வத்தை ஈட்டினேன் என்பான்!


அல்லாஹ்

ஆதமின் மகனே உன் செல்வத்தை எவ்வாறு செலவழித்தாய்?


இன்றைய இளைஞன்

என் இறைவா! என்னுடைய குழந்தை பிறந்ததும் என் மாமியார் குழந்தைக்கு நாகூர் தர்காவிறகு சென்று மொட்டை அடித்து தலையில் சந்தனம் தடவினால் முடி நன்றாக முளைக்கும் என்று கூறினார்! உடனே என் தாயாரோ அப்படியே ஏர்வாடிக்கு சென்றுவிட்டுவரலாம் எனக்கு பலநாட்களாக ஒரு நியாஸ் (வேண்டுதல்) உள்ளது என்றார்! உடனே என் மைத்துனரும் தங்கையும் அருகே உள்ள முத்துப்பேட்டை மற்றும் வேளாங்கண்ணிக்கும் சென்று சுற்றுலா செல்லலாம் என்று கூறினார்கள்! உடனே நானும் சம்மதித்து மினி வேன் ஒன்றில் கூட்டுக்குடும்பமாக சுற்றுலா சென்றோம் அதற்கு ஆன செலவுத் தொகை ரூபாய் 30000.

சுற்றுலா சென்று 6 மாதங்களுக்குள் என்னுடைய தொழிலில் பெருத்த நட்டம் ஏற்பட்டது உடனே எனது மனைவியின் நகைகளை அடைமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி தொழில் நடத்தினேன். ஓரளவு லாபம் வந்தது வட்டி கூட கட்டவில்லை!

ஆனால் மனதில் ஒரு நீங்காத ஆசை இருந்தது 2 வட்டிக்கு ரூ.60000- த்தில் லேட்டஸ்ட் மாடலில் ஒரு மோட்டர் பைக் வாங்கினேன்!

மனைவி கோபித்துக் கொண்டால் உடனே 4 வட்டிக்கு ரூ. 1 இலட்சத்தில் 10 சவரன் நகை வாங்கி கொடுத்தேன்!

பிறந்த என் மகனுக்கு எல்.கே.ஜி. சேர்க்க வேண்டும் எனது தந்தையோ செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தினார் 6 வட்டிக்கு ரூ.40000 செலவானது.

மைத்துனர் வந்தார் மச்சான் ஒரு 3 அடுக்கு மாடி வீடு உள்ளது சீப் ரேட்டில் ரூ.10 லட்சத்தில் முடித்துத்தருகிறேன் என்றார் உடனே என்னிடம் இருந்த சொத்தை 3 இலட்சத்துக்கு விற்று 3 அடுக்கு மாடி வீடு வாங்க திட்டமிட்டு வாங்கிய வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தேன்.


அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டாய்?

இன்றைய இளைஞன்

என் இறைவா! கடன் தொல்லை தாங்க முடியவில்லை தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டேன்.

அல்லாஹ்

ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை என்ன?

இன்றைய இளைஞன்

என் இறைவா! நான் மரணித்தபின் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது!




அல்லாஹ் (இவ்வாறு சொன்னால்)

ஆதமின் மகனே! நீ மரணித்த பின் உன் குடும்பத்தின் நிலை இதுதான், கேள்!

விதவையான உன் மனைவியின் நிலை பற்றி கேள்

நீ மரணித்தபின் ஒரு நாள் உன் விதவையை உன் நெருங்கிய உறவினர் கையை பிடித்து இழுத்தான் அவளோ பதறித்துடித்து ஓடி அறைக்குள் தாழிட்டு தன் கற்பை காப்பாற்றிக்கொண்டாள்! அழுதாள்! (இவள் மார்க்க நெறி பேணி தன் கணவனுக்கு நல்ல புத்தியை புகட்டியிருந்தால் இந்த நிலை வருமா? இது இவள் செய்த தீய செயலுக்கான விதி அதனால் அவதிப்படுகிறாள்)


அநாதையான உன் மகனின் நிலை பற்றி கேள்



ஒருநாள் உன் மகன் பள்ளியில் சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மாணவன் சொன்னான் என் தந்தை டாக்டர், ஒருவன் என் தந்தை இஞ்ஜீனியர், ஒருவன் என் தந்தை வக்கீல் என்றனர் அவர்கள் உன் மகனிடம் உன் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்க அவனோ மூச்சடைத்து நின்றான்! பதிலுக்கு எனக்கு அப்பா இல்ல! என்று கதறினான் பிறகு ஓடிச் சென்று பள்ளியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தேம்பி! தேம்பி அழுதான் (இவன் என்ன பாவம் செய்தான்? இந்த பச்சிளம் பிஞ்சின் அழுகைக்கு உன்னிடம் பதில் உள்ளதா? என்று அல்லாஹ் நம்மை கேட்பானே!)


அநாதையான உன் பெற்றோர் நிலை பற்றி கேள்



நீ மரணித்தபின் உன் தந்தை உன்னால் சொத்தை இழந்தார், சுகத்தை இழந்தார் நோய்வாய்பட்டு மருத்துவம் செய்ய வசதியில்லாமல் ”கேடுகெட்ட மகனையா நான்
பெற்றேன்” என்று உன்னை சபித்துக்கொண்டு மரணித்தார்!



நீயும் உன் தந்தையும் மரணித்த பின் உன்னை 10 மாதம் வயிற்றில் சுமந்து சிரமத்திலும் சிரமமாக பெற்றெடுத்த தாய் அநாதையாக எந்த புகழிடமும் கிடைக்காமல் கிழவியாக ஒவ்வொரு வீட்டிலும் பத்துப்பாத்திரம் தேய்த்து வாழ்கையை கழித்தாள்! அவளுக்கு ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லாமல் மனம் உடைந்து ”கேடுகெட்ட மகனையா நான் 10 மாதம் சுமந்தேன்” என்று உன்னை சபித்துக் கொண்டு மரணித்தாள்!

இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால்?

இந்த இன்றைய இளைஞன் அல்லாஹ்விடம் மஹ்ஷரில் மன்னிப்பு கேட்பான் அல்லாஹ் மன்னிப்பானா? கேடுகெட்டவனே நீ மனிதர்களிளேயே மஹா கெட்ட மனிதனாகிய பிர்அவுனைவிட கேவலமான காரியத்தை செய்துவிட்டு என்னிடம் மன்னிப்பை வேண்டுகிறாயா? நீயோ பிர்அவுன்-ஐ விட முந்தி அவனுக்கு தந்தையாக உள்ளாய் போ நரகின் பாதாளத்தில் நிரந்தரமாக தங்கிக்கொள்! உனக்கு மன்னிப்பே கிடையாது என்று சொல்லிவிட்டால் ? ? ? ? (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் இந்த நிலை நம்மில் யாருக்கும் வரவேண்டாம்)

இளைஞர்களே இதோ குர்ஆனில் உங்களுக்குள்ள கனிவான அறிவுரை

”இன்னும் நினைவு கூறுங்கள் நாம் (யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழை களுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதி மொழியை வாங்கினோம் ஆனால்உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல் (அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்! (உலகப் பொதுமறை திருக்குர்அன் 2:83)

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

இளைஞர்களே

“இன்னும் அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக! (திருக்குர்ஆன் 7:199)

“அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்”.(திருக் குர்ஆன் 17:26)

“அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கையிழந்து விட வேண்டாம்! (திருக் குர்ஆன் 39:53)

ஆதமனின் சந்ததிகளே! இவ்வாறு அல்லாஹ்விடம் துவா கேளுங்கள்!

”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலி ஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை திருக்குர்அன் 46:15)

முடிவுரை

என் அருமை மூமின்களே! தந்தை இல்லாத, தாய் இல்லாத அநாதை சிறுவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

என் அருமை மூமின்களே! கணவனில்லாத ஏழை விதவைகளை தவறான கண்ணோடத்தில் பார்க்காதீர்கள் மேலும் அவர்களை விரட்டாதீர்கள் அவர்கள் தங்களது கற்புக்கு புகழிடம் தேடி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

என் அருமை மூமின்களே! பிள்ளைகளை இழந்து தவிக்கும் அல்லது பிள்ளைகளே இல்லாமல் வயதான காலத்தில் தவிக்கும் பெற்றோர்களை விரட்டிவிடாதீர்கள்! அவர்கள் பாசம் வேண்டி தங்களிடம் வந்திருக்காலாம் நீங்கள் அறியமாட்டீர்கள் அல்லாஹ் அறிவான்!

மூமின்களே அல்லாஹ்வின் வார்த்தைகளை கேளுங்கள்

“(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” ……………..(அல்-குர்ஆன் 107:1-3)

“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு
செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச்
செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)

குறிப்பு

மூமின்களே! இங்கு பதியப்பட்டது எனது சொந்தக்கருத்துக்களே! இது இளைஞர்களிடம் தாவா செய்யும் ஒரு கருவியாக இருக்கட்டும்! இக்கட்டுரையில் தவறு இருந்தால் திருத்துவதற்கு அறிவுரை கூறுங்கள் (இன்ஷா அல்லாஹ்) திருத்திக்கொள்ளலாம்! இந்தக்கட்டுரை உங்களுக்கு அர்ப்பணம்! இதை நீங்கள் வரைந்த கட்டுரையாக நினைத்துக்கொண்டு இளைஞர்களை சீர்படுத்துங்கள் எப்படியாவது நம் இளைஞர்கள் சீர்படவேண்டும் என்பதே நம் ஆசையாக இருக்கட்டும்! பேரும் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் நம் எல்லோருக்கும் அல்லாஹ் நிறைவான கூலி வழங்கி அருள்புரிவானாக! அமீன்!

அன்புடன்

அல்லாஹ்வின் அடிமை – உங்கள் நலம் விரும்பி

Abdul Rahman
Kilakarai

அல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்

بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இறை விசுவாசிகளே!

நாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.



தங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.



சகோதரர்களே! சிந்தித்துப்பாருங்கள்! நாம் எங்கே இருக்கிறோம்! பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா?



அல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர் ரஹ்மான்! அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம்! ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா? என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்!



ஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா? இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும்! (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக!).



சகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது

“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)



மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)



அல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சிந்திப்பதில்லையே!

சகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்!

சென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்
சென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்
சென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்
பிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்
(குழப்பமாக இருக்கிறதா? இதுதான் வாழ்க்கை!)



நம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே! அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே! இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே! அவன் ரஹ்மானில்லையா?



தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6-98)



நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!

அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3-6)



தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13-8)



வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!

”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)



நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)



நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!

அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)



மனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே!

சகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே! சிந்தித்துப்பாருங்கள்!



கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே! மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?



காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்குமே! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?



வாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?



சகோதரர்களே! பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே! மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே! மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!



இதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்

‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (அல்-குர்ஆன் 17:36)



சகோதரர்களே! இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்!

சகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங் களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உதவுகிறான்! நிலவிலும் உதவுகிறான்! காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான்! கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்!



ஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக் கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே! நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே!

ஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே!!! அல்லாஹ் ரஹ்மானில்லையா? ரஹ்மத்துல் ஆலமீன் இல்லையா?



ஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கா விட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோக மில்லையா? இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா? இது முறையா?



சிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடை களுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான்! வாடகையா? கூலியா? உணவா? உடையா? கட்டணமா? ஒன்று மில்லையே! மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கி றான்!

உங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)



(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? (75-37)



நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)



அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)

அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்
எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)



(நபியே!) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை
விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.” (திருக்குர்ஆன் 40:66)



சகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!

அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா? அல்லது பேசினால்
பதிலளிக்காது!. கேட்டால் கொடுக்காத! ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா?

உங்களுக்கு சிறு உதவி இதோ!

அல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புரிய வில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா? நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள்! விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்!



நீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா? யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக! சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்! ஸலாம்



இறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்!

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)



அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)

கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள்

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி? குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன? வரவு,செலவை வரையறுப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?




1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக் கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் 'இது உன் குழந்தை ' என்று ஒதுங்கக் கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.

31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.

37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.



மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?


1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. அதிகம் சினிமா பார்க்கக் கூடாது.

33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.



பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?


தன்னம்பிக்கை என்பது மனித வாழ்க்கைக்கு ஒரு நெம்புகோல் போன்றது. அது இல்லையேல் வாழ்க்கை இல்லை. இதனைப் பெற்றோர் தம் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். சுயமாகச் சிந்திக்க, சுயமாகச் செயல்பட குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.படிப்பில் , அதோடு கூட வீட்டு வேலைகளில் குழந்தைகளுக்குப் பெற்றோர் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.


குழந்தைகளை அச்சுறுத்தி அடித்துக் கண்டிக்கக் கூடாது. ஆனாலும் அதன் போக்கில் எதேச்சையாக விட்டுவிடக் கூடாது. குழந்தைகளுக்கு அனபுப்பால் ஊட்டி, அரவணைத்துப் பெருமைப் படுத்த வேண்டும் .'நீ ராசா அல்லவா? ராசாத்தி அல்லவா? ' என்கிற வாசகங்கள் பெற்றோர் வாயிலிருந்து வர வேண்டும். 'மக்கு, மண்டு, மண்டூகம் - போன்ற வாசகங்கள் மலையேற வேண்டும்.


பயம், கூச்சமின்றி, உறுதியான நெஞ்சம், உண்மையான பேச்சு, உயர்வான பண்பு இவை குழந்தைகளுக்கு அமைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?


பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.

பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.


உங்கள் பங்கு என்ன?




உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.



1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.


எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக - விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை?


நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள ...


பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.



வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். "

Abdul Rahman
Doha

Sunday, March 14, 2010

பிரியும் உயிர்...!? SUBHANALLAH....

அஸ்ஸலாமுஅலைக்கும்.

அன்புள்ளங்களுக்கு சிறு செய்தி....

"ஸகராத்துஹால்" என்று சொல்வோமே (மரணிக்கும் தருவாய்) அந்நிலையில் ஒருவரை "ஊடுகதிர்" பண்ணியபோது "ரூஹ்" எவ்வாறு பிரிகிறது என்பதை கண்டதாக கீழுள்ள செய்தி கூறுகிறது.

அதாவது காலில் இருந்து பிரிய ஆரம்பித்த 'ரூஹ்' வாய் வழியாக வெளியேறுகிறது. "ஊடுகதிரில்" தெரிந்த உருவம் "ரூஹ்" பிரிய பிரிய மறைகிறது. "ரூஹ்" முழுவதும் பிரிந்த பிறகு "ஊடுகதிரில்" உருவம் தெரிய வில்லை. ஆனால் உடல் "ஊடுகதிர்" இயந்திரத்தினுள். سبحان الله وبحمدهسبحاناللهالعظيم இது சாத்தியமா? ரூஹ் பிரிவதை காண முடியுமா? 'குர்ஆன், சுன்னா' வோடு ஒப்பிட்டு உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

பார்த்ததை பகிர்ந்தேன். (குறிப்பு: கீழுள்ள தளத்தை சொடுக்கி ஒளிப்பதிவைப் பாருங்கள். மேலும் செய்திகளை மொழியை தேர்வு செய்து வாசியுங்கள் ) رابط المشاهدة :

http://www.mashahd.net/video/63426





Abdul Rahman
Doha


Please Read & Write ur comments,

நோயாளியை நலம் விசாரித்தல்

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)


''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)


அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிஅவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

அண்டை வீட்டார்

முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.


அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.


அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.


அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி


அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.


அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்


எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

Saturday, March 13, 2010

சொர்கத்தை நோக்கி

நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 3:133

இவ்வுலகில் வாழ்கின்ற நல்லடியார்கள் சுவனபதியை அடைவதற்காக பெரும் முயற்சி எடுக்கின்றனர். மார்க்க வழிபாடுகளுக்கு சம்பந்தமே இல்லாமல் வாழ்ந்து வருபவர்களின் உள்ளத்திலும் இந்த சுவனபதியை அடைய வேண்டும் என்ற ஆசையோடு வாழ்வதை நாம் காண முடிகிறது. உயர்வான இச்சுவனபதி வாழ்க்கையை அது ஒரு பிளாட்பார சரக்கு போன்று சாதாரணமாக எண்ணி வாழ்பவர்களை நாம் அதிகமாக காண முடிகிறது. இந்த உயர்வான வாழ்க்கையை அடைய வேண்டுமென்றால் அதற்காக நம்மை தயார் செய்ய வேண்டும்.

சுவர்க்க வாழ்வு
என்னுடைய நல்லடியார்களுக்கு எந்தத் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் செவியுறாத, எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றிடாதவை எல்லாம் நான் தயாரித்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு கூலியாக அவர்களுக்கு (தயாரித்து) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்தவொரு ஆத்மாவும் அறியாது' என்ற 32:17 வசனத்தையும் ஓதினார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி,முஸ்லிம், திர்மிதி)

நோய், மரணம், முதுமை, பீடைகள் இல்லாத வாழ்வு

சுவர்க்கத்திற்குறியவர்கள் சுவர்க்கத்தின் உள்ளே புகுந்துவிட்டால், "நீங்கள் ஆரோக்கியத்தோடு வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி நோயுறமாட்டீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஜீவித்திருப்பதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் எப்போதும் மரணிக்கவே மாட்டீர்கள்; நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி முதுமையை அடையமாட்டீர்கள். நீங்கள் பாக்கியங்கள் பெற்று சுகமாக வாழ்வதையே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் எப்போதும் இனி பீடை பிடித்தவர்களாக ஆக மாட்டீர்கள்; என்று அழைப்பாளர் ஒருவர் அழைத்துக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதி)

சுவர்க்க வாயில்கள்

நிச்சயமாக சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. எவர் தொழுகையாளியாக இருந்தாரோ அவர் தொழுகை வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் நோன்புடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார். எவர் தர்மம் செய்பவராக இருந்தாரோ அவர் தர்மத்துடைய வாயினிலிருந்து அழைக்கப்படுவார் என்று கூறியதும், 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இந்த எட்டு வாயில்களிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? என்று அபூபக்கர்(ரழி) கேட்டார்கள்; 'ஆம்' அவர்களில் நீரும் இருக்க ஆசிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹ்லுப்னு ஸஅத்(ரழி) புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜ்ஜா)

"நான் நபிமார்களை பின்பற்றுவோர்களை அதிகமாகக் கொண்டவன்; சுவர்க்க வாசலை தட்டுவோரில் நானே முதன்மையானவன்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

சுவர்க்கவாசிகளின் இதயங்கள்

பாவங்கள், விரோதங்கள், பொறாமைகள் போன்ற அனைத்து கெட்டவைகளும் நீங்கிய இதயங்களாக இருப்பார்கள்.

"விசுவாசங்கொண்டு, நற்காரியங்கள் செய்து சுவர்க்கத்தில் நுழைந்துவிட்ட அவர்களின் நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்" என்ற இறை வசனத்தின்படி பரிசுத்தமான நெஞ்சங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். அல்குர்ஆன் 7:43, 15:47

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தின் நிலை

சுவர்க்கம் புகும் முதல் கூட்டத்தினர் பவுர்ணமி இரவில் உள்ள முழு நிலவு போன்று இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தவர்கள் வானத்தில் ஒளிவீசிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் போன்று இருப்பார்கள். அதற்கு பின்னால் அங்கே பல படித்தரங்கள் உண்டு. மலம் கழிக்கமாட்டார்கள். சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மூக்குச்சளி சிந்த மாட்டார்கள்; எச்சில் துப்பமாட்டார்கள்; அவர்களுக்கு சீப்பு தங்கத்தினால் ஆனதாகும். அவர்களின் வியர்வை கஸ்தூரி மணமாகும். அவர்களுடைய குணங்கள் ஒரே மனிதருக்குள்ள குணத்தைப் போன்று (ஒரே) நிலையில் இருக்கும். அவர்களுடைய பிதா ஆதமுடைய உடல், உயரம் போன்று அறுபது முழத்தில் இருப்பார்கள். அவர்களுக்கிடையே கோபதாபங்களோ, குரோதங்களோ இருக்காது காலை, மாலை நேரங்களில் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். (அபூஹுரைரா (ரழி), புகாரி, முஸ்லிம், திர்மிதி

சுவர்க்கவாசிகளின் வரவேற்பு வார்த்தை

அச்(சுவனத்தில்) வீண் வார்த்தைகளையோ, பொய்யையோ செவியுறமாட்டார்கள்; 'ஸலாமுன்' (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக) என்ற வார்த்தையை தவிர அதில் அவர்களுடைய முகமன் வார்த்தை 'ஸலாமுன்' என்பதாகும். அல்குர்ஆன் 78:35, 10:10

சுவர்க்கத்து தோட்டங்கள், ஆறுகள், நீரூற்றுகள்

அல்லாஹ்வை பயந்து வாழ்ந்த நல்லடியார்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது; அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும் தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. அல்குர்ஆன் 47:15

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்

சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் புகுந்துவிடுவார்களானால் உங்களுக்கு இன்னும் அதிகமான ஒன்றை நீங்கள் நாடுகிறீர்களா என்று அல்லாஹ் கேட்பான். இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வென்மையாக்கவில்லையா? நீ எங்களை சுவர்க்கத்தில் நுழைவித்து நரகத்தைவிட்டும் எங்களை நீ காப்பாற்றவில்லையா? (இதைவிட வேறு எங்களுக்கு என்ன வேண்டும்) என்று சொல்வார்கள். திரை அகற்றப்படும் தங்கள் இரட்சகனை காண்பதைவிட வேறொரு பிரியமான பொருளை அவர்கள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று ரஸூலுல்லாஹ் கூறினார்கள். (ஸுஹைபு (ரழி), முஸ்லிம், திர்மிதி)

மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.

அப்துல் ரஹ்மான்
கீழக்கரை

நாவைப் பேணுக!

உண்மை பேசுக!

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக!

பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக!

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் -நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக!

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக!

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்!

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்!

உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்!

யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்!

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; 24:23


Abdul Rahman
Doha

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன்

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.
என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் ! இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற் காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டை களிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். “கூடா நட்பு கேடாய் முடியும்” என்ற பழமொழி மறந்து விட்டதோ?
என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனை களையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ”ஹுதன்லில் முத்தக்கீன்”இறையச்சமுடையவர் களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர் களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.
இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே ! அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே ! இது நியாயமா?
டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர் (சீரியல்) களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளி யாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா? ஓ ….. ஜெய்னம்பு பீவியே … படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?
எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- “திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.”
(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)
பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்ற தாகி விடுகிறது.
என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனிதனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா? வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்க கூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.
ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே ! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா? உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன். என்பதை நினைவில் வைத்துக் கொள் !
ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ? அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம் !
தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில் லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங் களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.
பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப் பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப் பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர் கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று ! பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப் படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க் குலத்தினரின் முணு முணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.
ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய் ! உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணு முணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது ! எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான் !
இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை ! அறிவுள்ள வர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர் களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.
என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளி மயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந் தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !
( வஸ்ஸலாம்! )

Abdul Rahman
Doha
பார்க்கவேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்தவேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?

ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?

இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?

ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?

தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?

தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?

மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?
மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?
யா அல்லாஹ்..! என்னை அந்த சுவனத்தினுள் பிரவேசிக்க அனுமதிப்பாயாக..! என்று மூன்று முறை கூறினீர்களா?ஏனென்றால், ''யா அல்லாஹ், என்னை சுவனத்தினுள் அனுமதிப்பாயாக - என்று மூன்று முறை கூறினால், அந்தசுவனம் (இவ்வாறு) பதிலளிக்கின்றது : யா அல்லாஹ், அவன் அல்லது அவளை என்னுள் நுழைந்து விடஅனுமதிப்பாயாக..! (என்று சுவனம் அல்லாஹ்விடம் மன்றாடுகின்றது). (திர்மிதீ)

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழி ஒன்றையேனும் இன்று வாசித்தீர்களா?

தீமைகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும், அத்தகைய தீங்கினைச் செய்து கொண்டிருப்பவர்களிடமிருந்தும்விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?

அதிகமான சிரிப்பு, அதிகமான ஜோக்குகள் இவற்றினைத் தவிர்ந்து வாழ முயற்சித்தீர்களா?

செவிப்புலனையும், பார்வையையும், சிந்திக்கும் திறனையும் இன்னும் இது போன்ற எண்ணற்றஅருட்கொடைகளை உங்களுக்கு வழங்கியிருக்கும் அல்லாஹ்விற்கு, தினமும் நன்றி கூறிக்கொண்டிருக்கின்றீர்களா?

இன்றைய தினம் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உணவளித்தீர்களா அல்லது அவர்களுக்குஉதவினீர்களா?

உங்களின் (தவறுகளின்) மீதும், அல்லாஹ்வின் பொருட்டும் உங்களை நீங்களே கடிந்து கொண்டீர்களா?

பிறர் மீது கடுமையாக நடந்து கொள்வது அல்லது சுய விளம்பரத்துடன் நடந்து கொள்வதனின்றும் தவிர்ந்துகொண்டீர்களா?

அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதீர்களா?

ஃபஜ்ருத் தொழுகை அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வினை நினைவு கூர்ந்தீர்களா?

நீங்கள் செய்து விட்ட பாவங்களுக்காகவும், இன்னும் வரம்பு மீறி நடந்து கொண்டதற்காகவும், இஸ்திஃக்ஃபார்என்ற பாவ மன்னிப்புக் கோரினீர்களா?

இறைவா..! உன்னுடைய உவப்பிற்குரிய வழியில், ''ஷஹீத்"" என்ற அந்தஸ்தில் நான் மரணமடைய வேண்டும்என்று அல்லாஹ்விடம் மனமுருகி வேண்டிக் கொண்டீர்களா?

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவரொருவர் அல்லாஹ்விடம் நேர்மையான முறையில் தான் ஷஹீத் என்ற அந்தஸ்தில் மரணமடையவேண்டும் என்று விரும்பிக் கேட்கின்றாரோ, அவ்வாறு பிரார்த்திக்கும் அவன் அல்லது அவளின் பிரார்த்தனையைஅல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான், அவன் அல்லது அவள் - அவர்களுடைய படுக்கையில் மரணமடைந்தாலும்சரியே..! (முஸ்லிம்)

மார்க்கத்தில் என்னுடைய இதயத்தை நிலைத்திருக்கச் செய்வாயாக என்று பிரார்த்திப்பதுண்டா?

உங்களது பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்கள் என்று சில நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில்நீங்கள் அல்லாஹ்வினிடத்தில் பிரார்த்தித்ததுண்டா?

இஸ்லாமிய மார்க்க அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு, புதிய இஸ்லாமியநூல்களை வாங்கினீர்களா?

இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் அல்லதுமரணித்தவர்களுக்கும் பாவ மன்னிப்புக் கோரினீர்களா? ஏனென்றால் அவ்வாறு நீங்கள் செய்கின்ற பிரார்த்தனைஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குகின்றான்.
இஸ்லாம் என்ற அருட்கொடையை என்மீது அருளியதன் காரணமாக என்னை முஸ்லிமாக உருவாக்கியவனே..உனக்கே நன்றிகள் பல என்று அவனது அருட்கொடைகள் பற்றி நினைவு கூர்ந்து நன்றி செலுத்தினீர்களா?

உங்களது சகோதர மற்றும் சகோதரிகளை அல்லாஹ்விற்காக மட்டுமே அவனது திருப்பொருத்ததினை நாடிசந்தித்ததுண்டா?

மக்களையும், உங்களது குடும்பத்தாரையும், உங்களது சகோதர, சகோதரிகளையும் அல்லது அண்டைஅயலார்களையும் இன்னும் உங்களுடன் தொடர்புள்ள அனைவரையும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம்அழைத்து அழைப்புப் பணி புரிந்தீர்களா?

உங்களைப் பெற்றவர்கள் மீது கருணையுடன் நடந்து கொண்டீர்களா?

இன்றைய தினத்தில் ஒரு பிரச்னையைச் சந்தித்து, அதன் பின்னர் : ''இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்"" (அவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது) என்று கூறினீர்களா?

யா அல்லாஹ், ''நான் செய்து விட்ட தவறுகளுக்காகவும் இன்னும் அறிந்தும் செய்தவற்றுக்கும் உன்னிடம் நான்பாதுகாவல் தேடுகின்றேன். என்னுடைய அறியாமையின் காரணமாகச் செய்து விட்ட தவறுகளுக்காகவும்உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன்."" இவ்வாறு நீங்கள் பாவ மன்னிப்புக் கோருவீர்களென்றால் அல்லாஹ்உங்களது சிறிய மற்றும் பெரிய பாவங்களை மன்னித்தருள்கின்றான். பிரார்த்தித்தீர்களா?

மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படவிருக்கின்ற அந்த மறுமைநாளில் இவ்வுலகில் நாம் செய்துகொண்டிருந்தவைகள் பற்றி, ''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.""


'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின்அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்¢ 'எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களைமன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக, இன்னும், எங்க(ளுடையஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!"

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

உனக்குக் கீழே உள்ளவர் கோடி

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.
இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:

“செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கவிதை வடிவம் பெற்று நிற்கின்றது. கால் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.
இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார். இது உடலமைப்பு ரீதியிலான பிரச்சனைக்குரிய மிகப் பெரும் தீர்வாகும்.

இது போல் பொருளாதார ரீதியில் தனி மனிதன், குடும்பம், நாடு என்று எல்லோருமே தனக்குக் கீழுள்ளவரைப் பார்த்து ஆறுதல் அடையும் போது தனி மனிதன் நிம்மதி அடைகின்றான். குடும்பம் நிம்மதி பெறுகின்றது. நாடு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது. எங்கு, யார் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்க்கத் துவங்குகின்றாரோ அங்கு அமைதியின்றி தவிக்கின்றனர். தனி மனிதன், குடும்பம், நாடு என்று அந்தந்த வட்டத்திற்குத் தக்க பிரச்சனைகள் வெடிக்கின்றன.

கடைசியில் போர் மேகங்கள் சூழ்ந்து பல்லாயிரக்கணக்கான, ஏன் பல இலட்சக்கணக்கான உயிர்கள் பயாகிப் போகின்றன. மேல் தட்டு மக்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் இந்தப் பாதகமான மனித நோய் தான் மக்களை அழிக்கும் அணு ஆயுதமாகத் திகழ்கின்றது. அகில உலகிற்கும் அமைதியைத் தரும் மார்க்கத்தின் மக்கள் தூதராக வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நோயை, கீழ் தட்டு மக்களைப் பார்த்து குணப்படுத்தச் சொல்கின்றார்கள். இது பேணப்படுமாயின் உலகம் அமைதிப் பூங்காவாகி விடும்.
உலகமெங்கும் தொற்றியுள்ள இந்த நோய் தான் அரசு ஊழியர்களிடத்திலும் நுழைந்து அவர்களின் நிம்மதியைப் பறித்து, அவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கின்றது.

கை நிறைய சம்பளம் பெறும் இந்த மக்கள் தங்களை விட மேல் தட்டு மக்களைப் பார்க்க ஆரம்பித்தனர். இன்று வீதிக்கு வந்து விட்டனர். தங்களுக்குக் கீழ் தட்டு மக்களைப் பார்த்திருந்தால் இந்தப் பரிதாபகரமான நிலையை சந்தித்திருக்க மாட்டார்கள். தங்கள் பணிகளைச் சரிவர செய்திருப்பார்கள்.

பொதுவாகவே மக்களிடம் அரசு ஊழியர்கள் நடந்து கொள்ளும் விதம் ௲ அந்த மக்களின் வருவாயில் வாழ்கின்றோம் என்ற நிலையில் இல்லாமல், மக்களின் எஜமானர்களாக ௲ அவர்களை அலைக்கழித்து சித்ரவதை செய்யும் சர்வாதிகாரிகளாகச் செயல்பட்டனர்.

இதில் விதிவிலக்குகள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும் அரசு எந்திரத்தைக் குறித்த பொதுமக்களின் பொதுவான சிந்தனை இப்படித் தான் உள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இதனால் தான் இன்று அரசு ஊழியர்கள் மீது அந்த மக்கள் அனுதாபப் படவில்லை. மாறாக இவர்களுக்கு இந்தத் தண்டனை தேவை தான் என்பது போன்ற கருத்து நிலவுவதைப் பார்க்க முடிகின்றது. சொல்லப் போனால் அவர்களின் பல நாள் நிந்தனை தான் இந்தத் தண்டனை என்று கூட நினைக்கத் தோன்றுகின்றது.

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனையைப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் இல்லை” (நூல் : புகாரி 1496)

அரசு ஊழியர்களின் இந்தச் சோதனையைப் படிப்பினையாக எடுத்து நாம் அனைவரும் உடலமைப்பு மற்றும் பொருளாதார ரீதியிலான பிரச்சனைகளில் நம்மை விட மேல் தட்டு மக்களைப் பார்க்காமல் கீழ் தட்டு மக்களைப் பார்த்து, படைத்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோமாக

கனவுகள் (Dreams)

நுபுவத்தில் நற்செய்தி கூறக் கூடியவைகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நற்செய்தி கூறக் கூடியவைகள் என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நல்ல கனவுகள் என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) நூல் : புகாரி (6990)

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுகின்றன. உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடப் புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூகததா (ரலி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், திர்மிதி

காணாத (அல்லது கண்ட) கனவு விஷயத்தில் யார் பொய் சொல்கிறாரோ அவர் (மறுமையில்) இரண்டு கோதுமைகளை சேர்த்துக் கட்டுமாறு வற்புறுத்தப்படுவார். அவரால் கட்ட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரீ (7042), திர்மிதீ (2385)

பயன்கள் :

நல்ல கனவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கின்றன. அவை நுபுவத்தில் மேலும் நற்செய்தி கூறக் கூடியவைகளில் ஒன்றாக இருக்கின்றன.

நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்தும் கெட்ட கனவுகள் ஷைத்தானிடமிருந்தும் ஏற்படுகின்றன. கனவு விஷயத்தில் பொய் சொல்பவருக்கு கடுமையான வேதனையுண்டு.

கனவுகளுக்குரிய ஒழுக்கங்கள்

நல்ல கனவுகள் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும் தீய கனவுகள் ஷைத்தானின் புறத்திலிருந்தும் ஏற்படுவனவாகும். உங்களில் எவரேனும் தான் விரும்பாத கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அல்லாஹ்விடம் அதன் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடட்டும். நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் எந்தப் பக்கம் படுத்திருக்கின்றாரோ அதிலிருந்து திரும்பிப் படுத்துக் கொள்ளட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது.

- அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : புகாரீ (6984), முஸ்லிம்.

உங்களில் ஒருவர் தனக்கு விருப்பமான கனவினைக் கண்டால் நிச்சயமாக அது இறைவன் புறத்திலிருந்து வந்திருக்கின்றது. அதற்காக அவர் இறைவனைப் புகழ்ந்து அக்கனவை மற்றவரிடம் கூறட்டும். தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் நிச்சயமாக அது ஷைத்தான் புறத்திலிருந்து ஏற்பட்டிருக்கின்றது. அதன் தீங்கை விட்டும் இறைவனிடம் அவர் பாதுகாப்புத் தேடட்டும். அக்கனவை யாரிடமும் கூற வேண்டாம். நிச்சயமாக அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

- அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) நூல் : புகாரீ (7045)

உங்களில் ஒருவரின் உறக்கத்தில் ஷைத்தான் விளையாடினால் அதை எந்த மனிதருக்கும் அவர் கூற வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது உரையின் போது கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம்.


பயன்கள் :

ஒரு முஸ்லிம் தான் விரும்பாத ஒரு கனவைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பி விட்டு அக்கனவின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும். மேலும் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு முஸ்லிம் தான் விரும்பாத கனவைக் கண்டால் அவன் யாரிடமும் சொல்லக் கூடாது. நிச்சயமாக அதனால் அவனுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

ஒரு முஸ்லிம் தான் கண்ட அர்த்தமற்ற கனவுகளை மற்றவர்களிடம் கூறக் கூடாது. அவை ஷைத்தானுடைய திருவிளையாடலாகும்.


By

Abdul Rahman
Doha

Monday, March 8, 2010

பிரார்த்திப்போம்

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!

இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை!

''பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, ''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது, அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது ''இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்'' என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, ''நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, ''இதை நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

'நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338

பாவமானதைக் கேட்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று (மனிதன்) கூறுகின்றான். உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது. அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2735.

அவசரப்படக்கூடாது

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தித்தேன், எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340

நிராசை அடையக் கூடாது

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம் நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)

உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு,

தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல் குர்ஆன் 23:51)

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மை யானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல் குர்ஆன் 2:172)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். ''அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1844

இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து, பிரார்த்தனை செய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படவில்லை என்றால் அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக் கூடியதைக் கேட்பான். உதாரணமாக, தனக்கு நிறைய செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கின்றான். அனைத்தையும் அறிந்த இறைவன் அதைக் கொடுப்பதற்குப் பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான். அதுவும் இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

''உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ''அல்லாஹ் அதிகமாக்குவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.

'உங்களுடைய இறைவன் சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸல்மான் (ரலி) நூல்: இப்னு மாஜா 3911

பாவமானதையும், உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிலளிக்கப்படும் துஆக்கள்

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன், நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை, பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...
''பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது, நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு, அவனுடன் யாரையும் கூட்டாக்காமல், பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக! (தொடர்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்)


Abdul Rahman
Doha-Qatar

Tuesday, March 2, 2010

இறைவனின் நாட்டம்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ 11:41

11: 41. ''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார்.

________________________________________


இறைவனின் நாட்டம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ்(அலை) அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.

நேர்வழியை ஏற்றுக்கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தினரின் மீது வழிகெட்ட பெருங்கூட்டத்தினரால் அளவு கடந்த சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

வழிகெட்ட கூட்டத்தினர் ஒழுக்கக்கேட்டையும், பெரும் சீரழிவையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால்; பெருவெள்ளத்தை ஏற்படுத்தி அதில் அவர்கள் முழுவதையும் அழித்து விட்டு அவர்களின் சித்ரவதைகளை தாங்கிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு கூட்டத்தினரை காப்பாற்றி வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக இறக்குவதற்காக இறை உத்தரவின்படி நபியவர்களால் கப்பல் கட்டி முடிக்கப்பட்டு அதில் ஏறச்சொல்லும் போது தான் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்றுக் கூறி ஏறச் சொன்னார்கள்.

கப்பலை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதிலிருந்து அது ஏன் உருவாக்கப்படுகின்றது என்பது வரை இறைவன் நபியவர்களுக்கு வஹியின் மூலம் முன்கூட்டியே அறிவித்து விட்டதால் இதில் ஏறுங்கள் ஓடும் என்று உறுதியாக கூறமுடியும் என்றாலும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்று ஏன் கூறினார்கள் ?


படிப்பினைகள்

நம்மைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்காகவும் இறைவனை நிணைவு கூர்ந்து நன்றி செலுத்தக் கூடிய நாம் நம்முடைய எதிர்கால நிகழ்வுகள் இவ்வாறு தான் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்று நம்முடைய புலனுக்கு சரியாகத் தோன்றினாலும் அது நிகழ்வதும், நிகழாததும் இறைவனின் நாட்டத்தில் உள்ளது என்ற நம்பிக்கையை மனதில் ஆழமாகப் பதிக்க வேண்டும், பிறருக்கும் பதியச் செய்யவேண்டும்.

மக்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட நபியவர்களின் சத்தியப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் இணைந்து கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தாருடைய மனதில் இதை ஆழமாக விதைக்க வேண்டும் என்பதற்காக கப்பல் ஓடும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் இது ஓடுவதும், நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே உள்ளது. என்றுக்கூறி ஏறச் சொன்னார்ககள்.

பட்டைத் தீட்டிய வைரங்கள்.

இது ஒடாமல் நின்று விட்டால் ஏற்கனவே அசத்தியவாதிகளிடம் அனுபவித்த சித்ரவதைகளை விட கூடுதலாக அனுபவிக்க நேரிடலராம் என்ற அச்சத்தால் மீண்டும் அசத்தியத்திற்கே திரும்பி விட்டால் என்ன செய்வது என்று இழுத்துப் பிடித்து நிருத்துவதற்காக இது ஓடும் ஏறுங்கள் என்ற உற்சாக வார்த்தையைக் கூற வில்லை.

அரைகுறை நம்பிக்கையாளர்கள் பத்து ஒன்பதாக குறைந்தாலும் ஒன்பது எட்டாகக் குறைந்தாலும் இறுதியாக எத்தனைப்பேர் இறைநம்பிக்கையில் உறுதியுடன் நிற்கின்கின்றார்களோ அவர்களை இன்னும் இறைநம்பிக்கையில் தோய்த்தெடுத்து பட்டைத் தீட்டிய வைரங்கள் போல் மிண்ணச் செய்கின்ற பணியையே நூஹ் நபி காலத்திலிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலம் வரை இறைத்தூதர்கள் செய்து வந்தனர்.

நம்மைக் கடக்கவிருக்கும் அடுத்த வினாடிப் பொழுதும் கூட நம் கையில் இல்லை வல்லமைப் பொருந்திய இறைவனின் திட்டத்தில் உள்ளது என்ற உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோய்த்தெடுத்து இறைநம்பிக்கையில் பட்டைத் தீட்டிய வைரங்களாக மிண்ணியவர்களின் வாரிசுகள் இன்று

Ø கண்டிப்பாக அடுத்த மாதம் தந்து விடுகிறேன் 1000 ரூபாய் கடன் கொடுங்கள்; என்று வாக்குறுதி அளித்து கடன் பெரும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்..



Ø கண்டிப்பாக வெள்ளிக்கிழமை இன்ன இடத்தில் உங்களை வந்து சந்திக்கிறேன் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள், பெருநாளைக்கு ஊருக்கு வந்து விடுகிறேன் எதிர் பார்த்தக் கொண்டிருங்கள், என்று வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம.



Ø கண்டிப்பாக உங்கள் மகளை என் மகனுக்கு ( பிறந்து 6 மாதத்தில் இவன் ஐந்து வயதாக இருக்கும் பொழுதே ) முடித்து வைக்கிறேன் என்ற விதியின் அமைப்பை மறந்து வாக்குறுதி அளிக்கும் இறைநம்பிக்கையற்ற நிலையைக் காண்கின்றோம்.

இவ்வாறு இறைவனை மறந்து வாக்குறுதி அளிப்பவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் விழிப் பிதுங்கி நின்றவர்கள பலரைப் பாரத்திருக்கின்றோம்.

கண்டிப்பாக தந்து விடுகிறேன்.

சம்பளத்தில் கொடுத்து விடலாம் என்று நம்பிக்கை வைத்தே வாக்குறுதி அளித்து கடன் பெறுகின்றோம், ஆனால் அதற்கு முன் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு அதற்கே சம்பளம் முழுவதையும் ஒதுக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டு விடும். வாக்குறுதி அளித்து கடன் பெற்ற உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் பெரும் விரிசல் ஏற்பட்டு விடுவதை நமது அனுபவப் பூர்வமாக பார்த்து வருகிறோம்.

கண்டிப்பாக வந்து விடுகிறேன்

வெள்ளிக்கிழமை விடுமுறை என்கின்ற காரணத்தால் வந்து வடுகிறேன் என்ற உறுதியான வாக்குறுதி அளிக்கிறோம், ஓவர்டைம் இருந்தால், அல்லது உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிட்டால் பரவா இல்லை எனலாம். வருவதாக முன்கூட்டியே வாக்குறுதி அளித்தவரை விட முக்கியமான வேறொருவர் அழைத்து விட்டால் இவர் முக்கியமா ? அவர் முக்கியமா ? என்ற நெருக்கடியான முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு முதலாமவர் புறக்கனிக்கப்பட்டால் அவர் நம்முடன் வருத்தப்பட்டு ஒதுங்கும் நிலை ஏற்படுகிறது.

வெக்கேஷன் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பெருநாளைக்கு ஊர் வந்துவிடுகிறேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறோம் ஆனால் கம்பெனியில் பெருநாளைக்கு வேறொருவரை அனுப்பி விட்டு அவர் வந்தப் பின்னரே நம்மை அனுப்புவதாக சொல்கின்றார்கள். வீட்டில் போன் செய்து சொல்லி விட்டோம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள் மேலும் நமக்கு வெக்கேஷன் இருப்பதால் போய்த் தான் ஆகவேண்டும் என்று கம்பெனியில் சண்டைப் போட்டு இறுதியாக ஒன்வேயில் போகும் நிலை நம்மில் பலருக்கு எற்படுகிறது.

கன்டிப்பாக முடித்து வைக்கிறேன்.

சிறு வயதில் பார்க்கும் போது அழகாக இருக்கலாம், சிறுது வளர்ந்ததும் அழகில் மாற்றம் ஏற்படும் அடுத்து படிப்பில் மந்தம் ஏற்படும், அடுத்து நடைமுறையில் மாற்றம் ஏற்படும், இதை எல்லாவற்றையும் விட வாக்குறுதி கொடுத்துக் கொண்டப் பெறறோர்களில் யாராவது ஒருவர் வசதியில் ஓகோ என்று ஆகிவிடலாம் ஒருவர் வறுமையின் கோரப்படியில் சிக்கிவிடலாம் நிலை மாறியப்பின் வாக்குறுதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு நிகரான வசதி படைத்தக் குடும்பத்தைத் தேடி ஓடி இரத்த உறவுகளை முறித்தக் கொண்டவர்கள் நம்மில் எத்தனை, எத்தனையோப் பேர்.

இறைவனை பொறுப்பு சாட்டாமல் தந்து விடுவேன், வந்து விடுவேன், முடித்து வைப்பேன் என்பதுப் போன்ற எதிர்கால நிகழ்வுகளை உறுதிப்படக் கூறினால் அவற்றை நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலமையை இறைவனே ஏற்படுத்துவான் என்பதை திருக்குர்ஆனின் 18வது அத்தியாயத்தில்; 32வது வசத்திலிருந்து 40வது வசனம் வரைப் பார்க்கலாம்.

Ø இன்ஷா அல்லாஹ் வருகின்ற சம்பளத்தில் திருப்பித் தந்து விடுகின்றேன் அல்லாஹ் நாடிவிட்டால் இன்னும் முன்கூட்டியேக் கூட தந்து விடுவேன்,



Ø வெள்ளிக்கிழமைக்குள் வேறு எதாவது முக்கிய அலுவல்கள் ஏற்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் வருகிறேன்.



Ø இதை விட வேறொரு நல்ல வாழ்க்கையை உங்கள் மகளுக்கு இறைவன் விதியில் எழுதி இருந்தால் அது தான் நடக்கும், அல்லது இது நடக்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால் இதே நடக்கும்.

இவ்வாறான வார்த்தைகளையே அனைத்து எதிர்கால தேவைகளுக்காகவும் வெளிப்படுத்த வேண்டும். இதுவே இறைநம்பிக்கையாளர்களின் இனிய பன்புகளில் ஒன்றாகவும், இறைவனின் அடிமை என்ற தன்னடக்கத்தையும் ஏற்படுத்தும்.

அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! ''எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்'' என்று கூறுவீராக! 23:24

கண்டிப்பாக என்ற பலமான வாக்குறுதி அளிக்காமல் அல்லாஹ் நாடினால் திருப்பித் தந்து விடுவேன் என்று அல்லாஹ்வை பொறுப்புச் சாட்டுவதால் மட்டும் நெருக்கடியான சூழ்நிலைக்கு தந்துதவ மறுத்தால் மனம் தளர்ந்து விட வேண்டாம் வேறொருவர் மூலம், அல்லது வேறு சிறந்த வழிகளில் அல்லாஹ் நெருக்கடியை தீர்த்து வைப்பான், அல்லாஹ் கைவிட்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை மனதில் கொள்ள வேண்டும்....அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக- பொறுப்பேற்பதில் அல்லாஹ் போதுமானவன். 4:81

இறுதி எச்சரிக்கை

மற்ற சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் சினை ஆட்டைக்காட்டி இது தான் இப்பொழுது என்னிடம் இருக்கிறது இதை வேண்டுமானால் ஓட்டிக் கொண்டுப் போ என்பார்களாம் காரணம் சினை ஆட்டை ஓட்டிக்கொண்டுப் போக எவருக்கும் மனம் வராது.

நம்முடைய சமுதாயத்து மக்களில் சிலர் தன்னிடம் இருப்பு தாராளமாக இருந்தும் கொடுத்துதவ மனமில்லாதவர்கள் இல்லை என்று சொல்லாமல் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறு கூறுவார்கள் (எல்லோரும் அல்ல சிலர்). இவ்வாறு இன்ஷா அல்லாஹ் பார்ப்போம் என்று இழுத்தவாறுக் கூறுவதைக் கேட்டவர் கிடைக்காது என்று உறுதி படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார்.

நீ உலகில் வாழும் பொழுது உன்னிடத்தில் உணவு கேட்டு வந்தேன் தர மறுத்து விட்டாயே என்று இறைவன் கூற ! உலகின் அதிபதியாகிய என் இறைவா ! நீயா ? என்னிடமா ? உணவு கேட்டு வந்தாய் ? என்று அடியான் கூற !

ஒரு பசியாளி உன்னிடத்தில் உணவு கேட்டு வந்த பொழுது அவனுக்குத் தர மறுத்தாயே அவனுக்கு கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக கருதி இருந்திருப்பேனே என்று மறுஉலக விசாரணையில் இறைவன் கேட்பதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் காட்டுகிறார்கள்.

Ø இறைவன் கொடுப்பதற்கு நாடுகிறான்,

Ø தடுப்பதற்கு அல்ல !

Ø நாம் தடுப்பதற்கு இன்ஷா அல்லாஹ் கூறலாமா ?

Ø கொடுப்பதற்கே இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும் !

உண்மையில் இருப்பு இல்லாத பொழுது கேட்டவருக்கு கொடுக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் நாம் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறினால் இறைவன் எங்கிருந்தாவது நம்முடைய மடியை கேட்டவருக்காக நிறைத்திடுவான்.

உண்மையில் நம்மிடத்தில் இருப்பு இருந்து கொடுக்க மனமில்லாமல் இன்ஷா அல்லாஹ் என்றுக்கூறினால் நம்மிடத்தில் உள்ள மொத்தத்தையும் போக்கிடச் செய்யும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எவருடைய உள்ளம் என்ன நோக்கத்தில் இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுகிறது என்பதை உள்ளங்களை பார்வையிடக்கூடிய இறைவன் அறிவதால் எதிர்கால நிகழ்வுகளுக்காக தூய எண்ணத்துடன் இன்ஷா அல்லாஹ் கூறவேண்டும்.

ü இன்ஷா அல்லாஹ் என்றுக் கூறுவது இறைவனின் பேராற்றலை வெளிப்படுத்தும் சிறந்த வார்த்தையும், நம்முடைய எதிர்கால தேவைகளுக்கான சிறந்த பிரார்த்தைனயுமாகும்.

எனவே இறைநம்பிக்கையாளர்கள் திறந்த மனதுடனும், சிறந்த நோக்கத்தடனும் இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், பொன்ற வார்த்தைகளை கூற வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புடன்
Abdul Rahman
Doha-Qatar